தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்து, இவ்வளவு விரைவாக அதுவும் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, நாளை (மே.7) பதவியேற்கவுள்ள சூழலில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும் நிலை
பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா ஊரடங்கு ஒருபக்கம், சட்டமன்ற தேர்தல் ஒருபக்கம் என்ற சூழலில், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
விலை குறைப்பு
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பிருந்து, விலை ஏற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக தேர்தல் நடைபெற்ற காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.
16 காசுகள் உயர்வு
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
மக்கள் தலையில்
தேர்தல் முடியும் வரை சைலண்ட் மோடில் இருந்த பெட்ரோல், டீசல் விலை நிலவரம், இப்போது மீண்டும் தினமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனை நாட்கள் விலை ஏற்றப்படாததன் சுமையை, அடுத்தடுத்து விலை ஏற்றி சரி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.