உலகளவில் கொரோனா காரணமாக 155,11,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை போல பல நாடுகளிலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பல நாடுகளை துவம்சம் செய்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதிகரிப்பதும், குறைவதுமாக வைரஸ் எண்ணிக்கை தொடர்ந்து வித்தை காட்டி வருகிறது.
அதேபோல், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,254,814 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் தினசரி வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகம்.
அதிகரிக்கும் நம்பர்ஸ்
உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 155,11,762 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 133,192,582 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 45,462 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகமாகும். கடந்த இரு நாட்களகாவே அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, அங்கு ஒரேநாளில் 730 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
எகிறும் எண்ணிக்கை
அதேபோல், பிரேசிலில் ஒரே நாளில் 75,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகமாகும். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,791 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், இங்கிலாந்தில் 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் 26,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு ஒரேநாளில் 244 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தள்ளாடும் இத்தாலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 360 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இத்தாலியில் 10,585 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
முடிவுக்கு வருமா?
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா கொடூரமாக பரவி வரும் சூழலில், நாடு முழுவதும் முழு லாக் டவுன் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு மூன்றரை லட்சத்துக்கும் மேல் பாதிப்புகள் பதிவாகிக் கொண்டிருக்கும் சூழலில், ஆக்சிஜன் தட்டுப்பாடு தான் மக்களை வாட்டி வருகிறது. பலரும் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறியே உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது.