பிரித்தானியாவில் மறுசுழற்சி மையம் ஒன்றில் பரிதாபமான நிலையில் பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் பொலிசார் அதன் தாயாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் திகதி பிராட்போர்டு பகுதியில் அமைந்துள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தில் இளஞ்சிவப்பு துணியில் மூடப்பட்ட நிலையில் ஒரு பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த குழந்தையின் தாயாரை கண்டுபிடிக்க அதிகாரிகள் தரப்பு தீவிரமாக முயன்றனர். பொதுமக்களிடம் இந்த விவகாரம் தொடர்பில் கோரிக்கை வைத்தும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் நீண்ட 9 மாதங்களாக விசாரணை மேற்கொண்டும் குழந்தையின் அடையாளம் அல்லது அதன் தாயார் தொடர்பில் எந்த தகவலும் பொலிசாருக்கு கிட்டவில்லை.
குழந்தையை கண்டெடுத்த சம்பவத்தன்று மறுசுழற்சி மையத்தின் ஊழியர்கள் உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளிக்கவே, குழந்தை ஏற்கனவே இறந்து போயிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, உடற்கூராய்விலும் குழந்தை எவ்வாறு இறந்தது என்பது தொடர்பில் கண்டறியப்படவில்லை. நீண்ட பல மாதங்களாக குழந்தையின் பெற்றோர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்பதால், குழந்தையின் சடலத்தை உரிய முறைப்படி நல்லடக்கம் செய்ய அதிகாரிகள் தரப்பில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முடித்துக் கொள்ள பொலிசாருக்கு ஆகஸ்டு மாதம் 25ம் திகதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தரப்பில், இதுவரையான விசாரணையில், குறித்த குழந்தையின் தாயார் பிராட்போர்ட் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றே நம்புகின்றனர்.
இருப்பினும், இதுவரை அவரை அடையாளம் காண பொலிசாரால் முடியவில்லை என்றே கூறப்படுகிறது.