திரைப்பட இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழ் திரை உலகில் 2002 ஆம் ஆண்டில் வெளியான ‘ஆல்பம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் வசந்தபாலன், 2006ஆம் ஆண்டில் வெளியான ‘வெயில் படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானார். புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டவராகவும், தீவிர இலக்கியவாதியாகவும் உலாவந்த வசந்தபாலன், ‘அங்காடி தெரு’ ‘அரவான்’ ‘காவியத்தலைவன்’ என தரமிக்க படைப்புகளை வழங்கி, தனித்துவமான இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் ‘ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது ‘மாஸ்டர்’ பட புகழ் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தை தன் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து இயக்கி வந்தார்.
தற்போது அவர் இந்தியாவெங்கும் பரவி வரும் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி, கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் வசந்த பாலன்,’ அன்புள்ள நண்பர்களுக்கு… நான் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் எவருடைய தொலைபேசி அழைப்பையும் எடுக்க முடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடிவருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்.’ என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனிடையே கொரொனோ பெருந் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி தமிழ் திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும், இதில் இயக்குனர் தாமிரா, இயக்குனர் கே. வி. ஆனந்த் ஆகியோர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.