முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எனது தம்பிக்கு வாழ்த்துக்கள் என முக அழகிரி கூறியுள்ளார்.
கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே ஓரங்கட்டப்பட்ட அழகிரி, பின்னர் கருணாநிதி மறைவுக்கு மட்டும் வெளியே வந்தார். அரசியலில் ஈடுபடாமல் இருந்த அழகிரி முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக கூறி வந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய போது, அவருடன் கூட்டணியில் இணைவதாக கூறி வந்த அழகிரி, ரஜினி அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததால் அழகிரியும் தனது அரசியல் கட்சி துவங்குவது குறித்து எதுவும் பேசவில்லை.
ஆனால் மதுரையில் தனது ஆதரவாளர்களை திரட்டி மாபெரும் ஆலோசனை நடத்தி, ஸ்டாலினை கண்டபடி திட்டடினார். என்னை ஏன் குடும்பத்தில் இருந்து பிரித்தார்கள் என உருக்கமாக பேசிய அவர், ஸ்டாலின் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை என கூறினார்.
ஆனால் தமிழகத்தில் நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை வென்று நாளை முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துக்கள் என மு.க. அழகிரி வாழ்த்தியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்றும், முதலமைச்சராகவுள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.