திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 16வது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் தரப்படவில்லை. நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கோட்டையான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறக்கப்பட்டு 69000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 1984ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், தனது தந்தையை விஞ்சி முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
எனவே, மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்கும் என்று பலதரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியாகியுள்ள திமுக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதியின் பெயர் இல்லை. மொத்தம் 34 துறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், உதயநிதி பெயர் அதில் இல்லை. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதிலும், உதயநிதிக்கு இடம் தரப்படவில்லையே ஏன் என்று திமுக தரப்பில் விசாரித்தோம்.
வாரிசு அரசியல் என்று பெயர் வரக்கூடாது என்பதால் இப்போதைக்கு உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. எம்எல்ஏ பதவி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி. மக்கள் உதயநிதியை வாரிசு என நினைக்கவில்லை. தகுதியை பார்த்து தேர்ந்தெடுத்தனர். ஆனால் அமைச்சர் பதவி ஸ்டாலின் முடிவு செய்வது. எனவே மகனுக்கு அமைச்சர் பதவி தந்தால் வாரிசு அரசியல் என கெட்ட பெயர் வரும். உதயநிதி அனுபவம் பெற்ற பிறகு வேண்டுமானால் அமைச்சராக்கப்படலாம். இவ்வாறு திமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்த் உட்பட, பல்வேறு கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அவரது அரசியல் செயல்பாடுகள் பல தரப்பாலும் பாராட்டப்படுகிறது. அவருக்கு மக்கள் மத்தியில் மேலும் நல்ல இமேஜ் கிடைத்ததும் அமைச்சராகும் வாய்ப்பு தேடி வரும் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.