முன்பெல்லாம் மாரடைப்பு அல்லது வேறு சில இதய நோய்கள் வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நோயாக பார்க்கப்பட்டது.
ஆனால் வாழக்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள், தூக்கமின்மை, எடை அதிகரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் எந்த வயதிலும் யாருக்கும் இதய நோய் ஏற்படலாம் என்ற சூழல் இருக்கிறது.
உலக இதய அமைப்பின் (World Heart Organisation)கூற்றுப்படி, உலகளவில் இறப்புகளுக்கு இதய நோய்கள் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
எந்த வயதிலும் இதய கோளாறுகள் ஏற்படலாம் என்றாலும் வயதுக்கு ஏற்ப ஆபத்து அதிகரிக்கிறது. மருத்துவ துறை ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வு காரணமாக பலருக்கும் தங்களது இதயம் தொடர்பான ஆரோக்கியத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதய ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான வழக்கமான சோதனை முறைகள் விலை உயர்ந்தவையாக உள்ளன மற்றும் நேரம் எடுத்து கொள்கின்றன. இதனால் ஆர்வம் இருந்தும் பலர் தங்கள் இதய பிரச்சனைகளைப் பற்றி சரியான நேரத்தில் அறிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. தற்போது கூட உங்களின் இதய ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.
அப்படி என்றால் வெளியே மருத்துவர்களிடமோ அல்லது ஆய்வகங்களுக்கோ சென்று உங்கள் இதய ஆரோக்கியத்தை அளவிட நேரம் மற்றும் பணத்தை செலவழிக்க வேண்டியதில்லை.
நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சோதனை உள்ளது, மேலும் இதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும். வீட்டிலேயே உங்கள் இதயத்தை சோதிக்க எளிதான முறை பற்றி பார்க்கலாம்.
ஆய்வு:
படிக்கட்டுகளில் ஏற எடுக்கும் நேரம் இதய ஆரோக்கியத்தின் நிலையை நமக்கு எளிதாக காட்டுகிறது. ஆரோக்கியமான இதயம் உள்ளவர்கள் ஒரு நிமிடத்திற்குள் 60 படிக்கட்டுகள் எளிதாக ஏற முடியும் என்று ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகிறது.
அறியப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் கரோனரி தமனி நோய் (இதய நோய்) காரணமாக பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்ட சுமார் 165 அறிகுறி நோயாளிகள் இந்த ஆய்வில் பங்கேற்க வைக்கப்பட்டனர்.
இந்த நபர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும்படியும் பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டனர்.
பின் எந்த இடைவெளியும் இல்லாமல் ஓடாமல் 60 படிக்கட்டுகளில் ஏற கேட்கப்பட்டனர். இந்த நேரம் பதிவு செய்யப்பட்டு அவர்களின் உடற்பயிற்சி திறன் வளர்சிதை மாற்றத்திற்கு (METs)சமமாக அளவிடப்பட்டது.
இது (METs) ஓய்வெடுக்கும்போது நுகரப்படும் ஆக்ஸிஜனின் அளவு என வரையறுக்கப்படுகிறது. இதில் 45 வினாடிகளுக்குள் படிக்கட்டுகளை ஏறிய நோயாளிகள் 9 முதல் 10-க்கும் மேற்பட்ட வளர்சிதை மாற்ற சமநிலைகளை அடைந்துள்ளனர். இது குறைந்த இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது.
90 வினாடிகளுக்கு மேல் எடுத்தால் :
இந்த ஆய்வில் படிக்கட்டுகளில் ஏற 90 வினாடிகள் அல்லது அதற்கு மேல் நேரம் எடுத்தவர்கள் 8-க்கும் குறைவான வளர்சிதை மாற்றங்களுக்கு சமமானதை அடைந்தனர். இது ஆண்டுக்கு 2 முதல் 4 சதவீதம் வரை இறப்பு விகித அபாயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. படிகளை என்ற 90 வினாடிகள் அல்லது அதற்கு மேல் நேரம் எடுத்தவர்களில் 58 சதவீதம் பேர் அசாதாரண இதய செயல்பாட்டைக் கொண்டிருந்தனர்.
எனவே இந்த ஆய்வின்படி சுமார் 60 படிக்கட்டுகள் ஏற ஒரு நிமிடம் 30 வினாடிகளுக்கு மேல் எடுத்தால், உங்கள் உடல்நலம் ஆபத்தில் இருக்கிறது. நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை குறிக்கும்.
தற்காலத்தில் இதய நோய் என்பது வயதானவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டிய ஒரு கோளாறாக இல்லை. ஆண்களுக்கான ஆபத்து 45 வயதிற்குப் பிறகு அதிகரிக்கிறது, பெண்களுக்கு 50 வயதிற்குப் பிறகு ஆபத்து அதிகரிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஆய்வின்படி, 45% மாரடைப்பு silent attack-ஆக இருக்கிறது. அதாவது இவை அறிகுறி இல்லாமல் ஏற்படுகின்றன.
இது இதய ஆரோக்கியத்தை நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக கவனித்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உடல் பருமன் உள்ளிட்ட காரணிகளை பொறுத்து ஒருவரால் 60 படிக்கட்டுகளை 45 – 90 வினாடிகளுக்குள் ரெஸ்ட் எடுக்காமல், ஓடாமல் ஏற முடிந்தால் இதய ஆரோக்கியம் குறித்து அடிக்கடி கவலைப்பட தேவையில்லை.
ஆனால் உங்களால் 90 வினாடிகளில் இதை செய்ய முடியாவிட்டால், உங்கள் இதயம் ஆபத்தில் இருக்கக்கூடும். எனவே மருத்துவரை அணுகுவது அவசியம்.