இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக்கூடாதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்கள் உள்ளீர்க்கப்படுவர் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்த போதும், ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது அவற்றிலிருந்து பின்வாங்கியுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அடுத்தே உலகளவில் இலங்கை நன்மதிப்பை பெற்றதென குறிப்பிட்டுள்ளதோடு, நீதியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் சர்வதேசத்தின் தலையீட்டை எதிர்பார்த்துள்ள நிலையில் நீதி விசாரணை பொறிமுறையில் தாமதத்தை ஏற்படுத்துவது உகந்ததல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் நகல் வடிவ ஆவணங்களும் சர்வதேச நியமங்களின் பிரகாரம் தயாரிக்கப்படவில்லையென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்து, நீதியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளது.