ஐபிஎல் 14-வது சீசன், இந்தியாவில் ஆரம்பமாகி கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
மேலும், இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை, மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு, உயரத்தை தொட்டது. அதே போல, கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தது.
இதற்கு பல பிரபலங்கள், உதவிய நிலையில், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உதவியிருந்தார். இவர் மற்றவர்களும் உதவ முன் வரவேண்டும் என கூறிய நிலையில், பிரட்லீ, சச்சின், தோனி, தவான், விராட் கோலி என பல முன்னணி வீரர்களும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பின் பேட் கம்மின்ஸிற்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.
இதனால், சகநாட்டு வீரர்களுடன் பேட் கம்மின்ஸ் மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். இம்மாதம் 15 ஆம் தேதி வரை, அவர்கள் அங்கு தங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய பேட் கம்மின்ஸ், “இந்தியாவில் இருக்கும் போது, எப்போதும் நான் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாக கருதியதில்லை.
நாங்கள் உயர் ரக ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். மக்களின் பிரச்சனைகளில் இருந்து பிரிக்கப்பட்டவன் போன்றும், என்னால் உதவி செய்ய முடியாதவன் போன்றும் வருந்தினேன்.
மேலும், நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவது என்பது, தேவையான ஒன்று தான். சிலர், இந்த மாதிரியான நேரத்தில், ஐபிஎல் தொடர் தேவையா என கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், இந்திய மக்கள் அனைவரும், ஊரடங்கு சமயத்தில், 3 – 4 மணி நேரம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதை வெகுவாக பாராட்டுகின்றனர். அதே போல், இரவு நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், இந்திய மக்களை வீட்டிலேயே இருக்க வைக்க அது உதவியது.
இந்திய மக்கள் என்னிடம் மிகுந்த அன்பைக் காட்டி வருகின்றனர். அவர்கள் மிகவும் அற்புதமானவர்கள். இந்த கடுமையான நேரத்தில், அவர்கள் என் மீது காட்டிய அன்பில் கொஞ்சமாவது காட்ட வேண்டும் என நினைக்கிறேன்” என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.