பெரும்பாலும், கணினி, செல்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினால் இன்று பலரும் தூக்கம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
அதிலும், வாழ்வில் அவசியமான ஒன்றாகவும் பொழுதுபோக்காகவும் மாறிவிட்டன இந்த செல்போன்கள். சாதரணமாக மொபைல் போனிலிருந்து வெளிப்படும் ‘ப்ளூ லைட்’ எனும் நீல ஒளி, கண்களின் ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு தூக்கத்தைத் தடுக்கிறது.
இந்த நீல ஒளி உமிழ்வையும் கண்களில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்க, 2016 இல் ஆப்பிள் நிறுவனம் ‘டார்க் மோடு’ அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
இதனால் மொபைல் போன் திரை கருமையாக மாறிவிடும். இது மொபைலில் இருந்து வெளியாகும் ஒளியை குறைகிறது.
மேலும், ஆப்பிளைத் தொடர்ந்து பல மொபைல் போன் நிறுவனங்களும், வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளும் தனித்தனியே டார்க் மோடு அம்சத்தை அறிமுகப்படுத்தின.
இப்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டில் இருக்கும் டார்க் மோடு வசதியினால் பயனர்களின் தூக்கம் கெடாது அல்லது தூக்கத்தை அதிகம் பாதிக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், அமெரிக்காவின் ஸ்லீப் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ப்ரிகாம் யங் யுனிவர்சிட்டியின் ஒரு புதிய ஆய்வு, டார்க் மோடு அம்சத்தினால் மட்டும் தூக்கம் மேம்படாது என்று கூறியுள்ளது.
டார்க் மோடில் இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்கள், டார்க் மோடு இன்றி இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்கள், ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்கள் என மூன்று குழுவினரை வைத்து ஆய்வு செய்தனர்.
அதில், ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்கள் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்தனர். டார்க் மோடு பயன்படுத்தியவர்கள், பயன்படுத்தாதவர்களிடையே பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆய்வாளர் ஜென்சன் தெரிவிக்கையில், இரவில் தூங்குவதற்கு முன் மொபைல் போன்பயன்படுத்துவதால் விளைவுகள் ஒரேமாதிரியாகவே உள்ளன.
மொபைல் போனில் இருந்து வெளியாகும் நீல ஒளிகள் மட்டும் தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தாது, மாறாக இரவில் நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் பொருத்தது என்கிறார்.
எனினும், நீல ஒளியை விட டார்க் மோடு கண்களுக்கு பாதுகாப்பளிக்கிறது என்றும் தூக்கத்தைக் கெடுப்பதில்லை என கூறுகின்றனர்.
ஆனால், டார்க் மோடு மட்டும் பயன்படுத்திவதினால் மட்டும் தூக்கம் வரும் என்பதில்லை என்று கூறியுள்ளார்.