ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள தெற்கு மல்லல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் சுகனேஷ் (வயது 12). இவன் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அந்த ஊர் கண்மாயில் குளித்துவிட்டு கண்மாய் கரையில் உள்ள கிணற்று பகுதியில் நின்று தலையை துவட்டி கொண்டிருந்தான். அப்போது கிணற்று கரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து, பூமிக்குள் இறங்கியது. புதைகுழியாாக பல அடி ஆழம் கீழே இறங்கியதில் சுகனேஷ் சிக்கினான்.
அவனை அந்த பகுதியில் நின்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, எந்திரம் மூலம் தோண்டினர். இரவிலும் மின்விளக்கு வெளிச்சத்தில் மீட்பு பணி நடந்தது.
சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின்பு, நேற்று அதிகாலை 2 மணி அளவில் சுகனேஷ் பிணமாக மீட்கப்பட்டான். அதிக ஆழத்தில் சகதிக்குள் சிக்கி இருந்த அவனது உடல் மீட்டு கொண்டு வரப்பட்டது. இந்த காட்சியை கண்டு, அவனது பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் சுகனேசை மீட்கும் பணியின் போது கிராமத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். அவனது உடல் மீட்கப்பட்டபோது அனைவரும் சோகமயமாகினர்.
இந்த சம்பவத்தில் சுகனேஷ் எப்படி சிக்கினான்? என்பது குறித்து உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சிறுவன் சுகனேஷ் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சென்றுதான் அந்த கிணறு அமைந்துள்ள கண்மாயில் குளித்துள்ளான். இதற்கிடையே அந்த கிணற்றினை தூர்வாருவதற்காக அதில் உள்ள தண்ணீரை பெரிய மோட்டார் வைத்து வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.
குளித்து விட்டு வெளியில் வந்த சுகனேஷ், கிணற்றின் அருகில் சென்று தண்ணீரை வெளியேற்றுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே தலையை துவட்டிக் கொண்டிருந்தான். காலை முதல் பெரிய மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அந்த மோட்டார் சத்தத்தின் அதிர்வினால் கிணற்றினை சுற்றிய தரைப்பகுதி மிகுந்த அதிர்விற்கு உள்ளாகி பலமிழந்து இருந்துள்ளது.
முன்னதாக கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பரவலாக பெய்த மழை காரணமாக கிணற்று பகுதி அதிக ஈரமாகவும் இருந்துள்ளது. அதனால்தான் நிலச்சரிவு ஏற்படுவது போன்று, திடீரென கிணற்றின் கரை இடிந்து புதைகுழியாக மாறியது. அதில் சிக்கிய சிறுவன் சுகனேஷ், மேல்எழுந்தவாறு நின்று தன்னை காப்பாற்றுமாறு கதறி உள்ளான்.
அக்கம்பக்கத்தினர் கிணற்று தண்ணீரை வெளியேற்ற கிணற்றின் உள்ளே விட்டிருந்த குழாயோடு இணைத்திருந்த கயிறை எடுத்து சிறுவன் மீது போட்டு கைகளை உள்ளே விட்டு மார்போடு சேர்த்து கயிறை கட்டி தூக்குவதற்கு தயாராகி உள்ளனர்.
அப்போது மணல் மேலும் சரியும் நிலை இருந்ததை குழிக்குள் இருந்த சிறுவன் அறிந்து, மேலே இருப்பவர்களும் உள்ளே சிக்கிவிடக்கூடாது என்று எண்ணி மேல்பகுதியில் நின்றவர்களை தள்ளி சென்று நின்று தூக்குமாறு கூறி எச்சரித்துள்ளான். இதனால் மேல்பகுதியில் இருந்தவர்கள் சற்று தள்ளி நின்று கொண்டு அவனை லாவகமாக தூக்க முயன்றபோது, கண்இமைக்கும் நேரத்தில் திடீரென்று மண் மேலும் அதிகமாக சரிந்து, சிறுவனை உள்ளே இழுத்துள்ளது. இதனால் கயிறோடு சிறுவன் உள்ளே சென்றுவிட்டான்.
கிணற்றின் கரை இடிந்து புதைகுழியாக மாறிய இடத்தில் இரவிலும் மீட்பு பணி நடந்த போது எடுத்த படம்.
இதன்பின்னரே தகவல் அறிந்து வந்த ஏர்வாடி தீயணைப்புத்துறையினர் சிறுவனை மீட்கும் பணியில் இறங்கினர். சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். தீயணைப்புத்துறையினர் கிணற்றை சுற்றியுள்ள பகுதியில் பள்ளத்தை பெரிதாக்கி தோண்டினர்.
கண்மாயின் மிகஅருகில் உள்ள பகுதி என்பதால் அதிக நீர் ஊற்று உருவாகி, குழிக்குள் தண்ணீர் அதிக அளவில் சேர்ந்தது. இதனால் குழியை மேலும் பெரிதாக தோண்டி உள்ளே இருந்த தண்ணீரையும், சகதியையும் வெளியேற்றியபடியே மீட்பு பணி நடந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததால், மீண்டும் தண்ணீர் சேர்ந்து, மண் சரிந்து கொண்டே இருந்ததால் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும் தீயணைப்பு துறையினர் தளராமல் தொடர்ந்து செயல்பட்டனர். ஆனால், சுகனேஷ் பிணமாக மீட்கப்பட்டது எல்லோரையும் துயரம் அடையச் செய்துவிட்டது. பின்னர் சிறுவனின் உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசின் கவனக்குறைவினால்தான் இந்த சம்பவம் நடந்து ஒரு சிறுவனின் உயிர் பறிபோய்விட்டது என்று கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் அவர்கள் கூறும் போது, “தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் நாங்கள், இந்த கிணற்று தண்ணீரை நம்பிதான் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் வாரந்தோறும் ஒருநாள் ஒவ்வொரு பணியாக செய்து எங்களின் தேவைகளை நாங்களே நிறைவேற்றிக்கொள்கிறோம். எங்களுக்கு குடிநீர் வசதி, கண்மாய் படித்துறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துகொடுக்க வேண்டும். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் அரசு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சப்-கலெக்டர் சுகபுத்ரா, “படித்துறை கட்டித்தரவும், குடிநீர் வசதி செய்து கொடுக்கவும் மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரணம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.