எதிர்வரும் ஆகஸ்டு மாதம் முதல் பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக ஒழிக்கப்படும் எனவும், மூன்றாவது தடுப்பூசியின் தேவை தற்போது இல்லை எனவும் தடுப்பூசி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மூன்று மாதங்களில் பிரித்தானிய மக்கள் கொரோனாவில் இருந்து முற்றாக பாதுகாக்கப்படுவார்கள் என தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் Clive Dix கூறியுள்ளார்.
மட்டுமின்றி 2022 வரை மூன்றாவது தடுப்பூசியின் தேவை பிரித்தானிய மக்களுக்கு இருக்காது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா முழுமையும் ஒட்டுமொத்தமாக 50 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதே வேகம் நீடிக்கும் என்றால், எதிர்வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிரித்தானியாவில் கொரோனா பெருந்தொற்றின் சுவடுகள் இருக்காது என நம்புவதாக Clive Dix சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வரவிருக்கும் குளிர்காலத்தில் நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி எடுத்துக் கொள்வதால், மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கான தேவை எழவில்லை எனவும், தேவை ஏற்படும் எனில் 2022 துவக்கத்தில் வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை மொத்தம் 34.5 மில்லியன் பிரித்தானியர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். மட்டுமின்றி 15.3 மில்லியன் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
இது உண்மையில் இங்கிலாந்தின் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் மற்றொரு மைல்கல் என Clive Dix சுட்டிக்காட்டியுள்ளார்.