பிரான்சில் ஒருவர் தன்னைப் பிரிந்த மனைவியை துப்பாக்கியால் சுட்டு, தீவைத்துக் கொளுத்தியதைத் தொடர்ந்து பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. பிரான்சிலுள்ள Bordeaux என்ற இடத்தைச் சேர்ந்த Mounir B (45) என்பவர் தன் மனைவியைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
பாதி தண்டனைக்குப்பின் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மனைவியை சந்திக்க முயலக்கூடாது என அவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று, தன் மனைவி வீட்டின் அருகே நாள் முழுவதும் வேன் ஒன்றில் காத்திருந்திருக்கிறார் Mounir.
மாலையானபோது, Mounirஇன் மனைவியான Chahinez (31) வீட்டை விட்டு வெளியே வரவும், அவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் Mounir. கால்களில் சுடப்பட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்த மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார் Mounir.
Chahinezஐக் காப்பாற்ற அக்கம்பக்கத்தவர்கள் வர, அவர்களையும் மிரட்டியிருக்கிறார் Mounir. Chahinez துடிதுடித்து உயிரிழக்க, Mounir சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். அரை மணி நேரத்திற்குப் பின் பொலிசார் Mounirஐக் கைது செய்துள்ளார்கள்.
விசாரணையில், தன் மனைவியைக் கொல்வது தன் நோக்கமல்ல என்றும், அவளை தண்டிப்பதற்காகவே அப்படி செய்ததாகவும் கூறியுள்ளார் Mounir. அத்துடன், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரிடமிருந்து துப்பாக்கி வாங்கியதாகவும் Mounir தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏன் Mounirக்கு காலில் குற்றவாளிகளை ட்ரேஸ் செய்ய உதவும் மின்னணு பட்டை அணிவிக்கப்படவில்லை என்று பெண்ணிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Chahinezஉடன் சேர்த்து பிரான்சில் இந்த ஆண்டு குடும்பப் பிரச்சினையால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 39 ஆகியுள்ள நிலையில், ஏற்கனவே குடும்பப் பிரச்சினைகளில் மனைவியை தாக்கியவர்களிடமிருந்தாவது துப்பாக்கிகளை பறிமுதல் செய்யக் கோரியும், Chahinezஇன் மரணத்துக்கு நீதி கேட்டும் பெண்ணிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.