எஸ்.யூ.வி காருக்குள் பாலியல் வன்புணர்வு செய்ய போதுமான இடம் இருக்குமா என வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திடம் அறிக்கை கேட்டு காவல்துறை அனுப்பியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் வன்புணர்வு குற்ற வழக்கு ஒன்றை விசாரித்து வரும் குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் இருந்து வந்துள்ள கோரிக்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினரை திகைக்க வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் காருக்குள் நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் வன்புணர்வு வழக்கு ஒன்றை விசாரித்து வருகின்றனர். காருக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினரின் கருத்தை காவல்துறை அறிந்துகொள்ள விரும்பியது.
பவேஷ் குமார் என்ற உள்ளூர் பிரமுகர், தனது காரில் வைத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
ஏப்ரல் 26 – 27 நள்ளிரவில் பவேஷ் குமார் அவருடைய ஃபார்ச்சூனர் காரில் வைத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் மே 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பவேஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த பாலியல் வன்புணர்வு வழக்கில் பவேஷ் குமார் மீதான குற்றத்தை நிரூபிப்பதற்காக வதோதரா வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திடம் அதன் கருத்தை அறிய விரும்பிய காவல்துறை, ஃபார்ச்சூனர் காரில் பாலியல் வன்புணர்வு செய்ய போதுமான இடம் இருக்குமா? காரினுடைய செண்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் குறித்தும் தொழில்நுட்ப ரீதியாக அறிக்கை அளிக்கும்படி கேட்டுள்ளது. காவல்துறையினரின் விசாரணைக்கு இந்த அறிக்கை பேருதவியாக இருக்கும் என கூறப்பட்டாலும் இது போன்ற அறிக்கை தங்களிடம் முதல் முறையாக கேட்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ அதிகாரிகள் கூறினர்.
பொதுவாக விபத்து வழக்குகளில் தான் வாகனத்தின் நிலைத்தன்மை அறிக்கை கேட்டு காவல்துறையினரிடம் இருந்து கோரிக்கை வரும் ஆனால் இது போல ஒரு வினோதமான கோரிக்கை தங்களிடம் முதல் முறையாக வந்திருப்பதாக ஆர்.டி.ஓ அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.