திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஷேகு இப்ராகிம் முகம்மது பிஸ்மி (38 வயது) என தெரியவருகிறது.
குறித்த நபர் தொடர்ச்சியாக மது அருந்தி வருவதாகவும், அதேபோன்று நேற்று மது அருந்திவிட்டு தாயாருடன் முரண்பட்டு விட்டு மலசல கூடத்திற்கு சென்று தூக்கில் தொங்கி உள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.