பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த கொஸ்கொட தாரக எனும் சந்தேக நபர், துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவருமான கொஸ்கொட தாரக என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கொஸ்கொட தாரக விசேட நடவடிக்கை ஒன்றிற்காக மீரிகம, ரேந்தபொல பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, கொஸ்கொட தாரக, பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார். குறித்த சந்தேக நபர் காயமடைந்து மீரிகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் அறிக்கையிடப்பட்டு நீதவான் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.
34 வயதான கொஸ்கொட தாரக நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 7 மனித கொலைகள், 21 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.