முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுச்சின்னத்தினை இடித்தழித்த ஈனச்செயலை வன்மையாக கண்டிப்பதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
உலகில் இந்த நூற்றாண்டில் நடத்தப்பட்ட மிகப் பெரும் இன அழிப்பு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு என இந்த இயக்கம் தெரிவித்துள்ளது. கொடூர இனழிப்பில் அநியாயமாக அழிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூற அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருப்பது மிகவும் மிலேச்சத்தனமானதும் சமகால நாகரிக உலகில் எந்தவோர் சராசரி அல்லது சர்வதிகார அரசும் செய்யத்துணியாத மிக ஈனத்தனமான இழிசெயல் என குறிப்பிட்டுள்ளது.
நவீன காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தின் வெளிப்பாடாகிய இவ் இன வன்முறை வெறியாட்டத்தை எண்ணி இன்றைய ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனியவேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நாளில் மிகவும் அமைதியான முறையில் நாட்டின் சட்ட ஒழுங்குமுறை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஒருசில அருட்தந்தையர்கள் இணைந்து முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் நடுகல்லினை நடுவதற்கு முற்பட்டவேளை அங்கு திரண்ட பொலிசாரும் இராணுவத்தினரும் நடுகல்லினை பதிக்கவிடாது முரண்பட்டும் அருட்தந்தையர்களை அச்சுறுத்தியும் பெரும் குழப்பத்தினையும் பதட்டத்தினையும் ஏற்படுத்தினர்.
இந்நிலையிலும் அங்கிருந்த அருட்தந்தையர்கள் மிகவும் நிதானத்துடனும் பண்புடனும் அப்பாவி மக்களை நினைவு கூறுவதற்காக ஏற்பாடுகளே தவிர வேறொன்றுமில்லை என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது சாதாரண அடிப்படை மானிட உரிமை என எவ்வளோ வினயமாக எடுத்துக்கூறியும் அதைக் கேட்காத பொலிசாரும் இராணுவத்தினரும் அருட்தந்தையர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இராணுவத்தினர் அப்பிரதேசமெங்கும் குவிக்கப்பட்டனர்.
இதன் பின்னரே இரவில் நினைவுத்தூபி இடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஈனத்தனமான இழிசெயலை யார் செய்தார்கள் என்பதும் ஏன் செய்தார்கள் என்பதும் தெட்டத்தெளிவாக நிரூபணமாகியுள்ளது.
இன அழிப்பிற்கு பதினொரு வருடங்கள் கழிந்தும் எவ்வித நீதியும் கிடைக்காது ஏக்கத்துடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் இருக்கும் ஈழத்தமிழினத்திற்கும் இச்செயலானது வெந்த புண்ணில் வேலைப்பாச்சியது போல உள்ளத்தில் ஆறாத ரணமாக மாறியுள்ளது.
இறந்தவர்களை கூட நினைவு கூற அனுமதியளிக்காதவர்கள் வாழ்பவர்களுக்கு உரிமைகளை கொடுப்பார்களா? நினைவுச்சின்னங்களே இருக்க அனுமதிக்காதவர்கள் மக்களின் வாழ்வுரிமையை அங்கிகரிப்பார்களா? இவர்களிடம் நீதியையும் உரிமையையும் எப்படி எதிர்பார்ப்பது? இதனால்தான் சர்வதேசத்தை நோக்கி ஈழத்தமிழினம் குரலெழுப்புவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.