பீஹாரில் நேற்று ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதந்து வந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரில் பக்சர் மாவட்டம் கங்கை நதியோரம் அமைந்துள்ள குலாபி படித்துறை அருகே 2 நாட்களுக்கு முன் 71 சடலங்கள் மிதந்து வந்தன. மாவட்ட நிர்வாகம் அந்த சடலங்களை கைப்பற்றி தகனம் செய்தது.
அந்த சடலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று பாட்னாவில் உள்ள கங்கையில் மேலும் பல சடலங்கள் மிதந்து வந்தது. அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது. அவை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடையுடன் இருந்தன.
இதைத் தொடர்ந்து அந்த சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, குலாபி படித்துறை அருகே உள்ள தகன மேடையில் எரியூட்டப்பட்டன. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் கங்கை நதி அருகே உள்ள உஜ்ஜியார், குலாதியா, பராலி படித்துறைகள், யமுனா நதி ஆகியவற்றில் மிதந்த 57 சடலங்கள் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கங்கை மற்றும் அதன் உபநதிகள் பாயும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கங்கையில் பிணங்கள் மிதப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில் மத்திய ஜல சக்தி அமைச்சகம், உத்தரபிரதேசம் மற்றும் பீஹார் மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது