பெருமாநல்லூரில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வந்த போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரோனை பார்த்து தெறித்து ஓடிய சம்பவம் பதிவாகியுள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் கோட்டத்திற்குட்பட்ட பெருமாநல்லூரில் போலீசார் தீவிர கண்காண்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெருமாநல்லூர் முக்கிய சாலைகளில் வாகன சோதனை, மற்றும் கிராமப்பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். பெருமாநல்லூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சிறுவர்கள் கூடி விளையாடுவது, கூடி பேசுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதை தடுக்கும் விதமாக பெருமாநல்லூர் நால் ரோடு, விவசாயிகள் நினைவு ஸ்தூபி சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காண்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சில இடங்களில் சிறுவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் பார்வையிட்டு விரட்டினர். ட்ரோன் கேமராவை கண்டதும் அங்கிருந்த அனைவரும் ஓடி விட்டனர். தொடர்ச்சியாக கிராமப்பகுதிகளில் இளைஞர்கள், சிறுவர்கள் கூடி இருப்பது ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.