தமிழ் மக்கள் தமது போராட்ட வலிமையை இழந்துவிட்டதால், இப்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளும் இழக்கப்பட்டுவிட்டதாகவே சிங்கள மக்கள் எண்ணுகின்றார்கள்.
தற்போது நல்லாட்சி அரசாங்கம் வரைவதாகக் கூறும் புதிய அரசியலமைப்பானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பொன்றையும் நடத்தி நாட்டு மக்களின் பெரும்பான்மை ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தற்போதைய அரசியலமைப்பு கூறுகின்றது.
புதிய அல்லது சீர்திருத்த அரசிலமைப்பில் தேர்தல் சீர்திருத்தச் சட்டமும், நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வும் உள்ளடங்கியிருக்கின்றது.
அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கறையானது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அதிகாரங்களை குறைப்பதன் ஊடாக பிரதமரின் அதிகாரங்களை பலமானதாக மாற்றிக் கொண்டு,அரசாங்கத்தை தலைமை ஏற்று நடத்த முடியும் என்ற தந்திரமாகும்.
சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதில் விருப்பமில்லை. ஏன் என்றால் குறைந்தது இன்னும் நான்கு வருடங்களுக்கு ஜனாதிபதியை முன்னிருத்தியே சுதந்திரக் கட்சியின் அரசியல் முன்நகரப்போகின்றது.
அவர்களைப் பொறுத்தவரையில், புதிய அரசிலமைப்பில் அக்கறைக்குரியதாக இருப்பது, தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்,
ஏன் எனில் தற்போதுள்ள விருப்பு வாக்கு அரசியல் முறையானது, தனிச் செல்வாக்கானவர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் வாய்ப்பாக இருப்பதால், தற்போதைய நிலையில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்குக் கட்டுப்படாதவர்களாகவும், கட்சிக்கு சவால் விடுக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.
தேர்தல் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, தொகுதிவாரி முறைமை வருமாக இருந்தால் சுதந்திரக் கட்சியின் பலமான தொகுதிகளில் கட்சியின் நற்பெயரைச் சம்பாதிக்கும் ஒருவரே கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு செயற்படும் நிலைமை உருவாகும்.
கட்சிக்கு கட்டுப்படாதவர்களுக்கு கட்சி தொகுதியை வழங்காதபோது, சுதந்திரக் கட்சியின் பெயரால் கட்சிக்கு கட்டுப்படாத ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிட முடியாது.
ஒரு தொகுதியில் சுதந்திரக் கட்சி ஒருவரை வேட்பாளராக நியமித்தால், கட்சியின் ஆசிர்வாதம் இல்லாமல் போட்டியிடும் ஒருவர் சுதந்திரக் கட்சியின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கட்சிக்கு கட்டுப்படும் உறுப்பினர்களை கட்சிக்குள் வைத்துக் கொள்வதற்கு தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறைமையே சுதந்திரக்கட்சியின் அக்கறையாகும்.
பிரதான கட்சிகளின் சுயநலனின் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலுக்கு மத்தியில், தமிழ் மக்களைப் பொறுத்தவரை புதிய அரசியல் திருத்தத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு பிரதான விடயமாக இருக்கின்றது.
தென் இலங்கை இனவாதிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு இப்போது பிரச்சினை ஏதும் இல்லை. ஆகவே அவர்களுக்கு அரசியல் தீர்வு என்று எதுவும் தேவை இல்லை என்பதுதான்.
இந்நிலையில், தமிழ் மக்களுக்கு தீர்வென்று ஒன்று வழங்கப்பட்டால் அது இலங்கையை இரண்டாகப் பிரித்து தமிழ் ஈழத்தை வழங்குவதற்கு ஒப்பானதாக அமையும் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.
ஆகவே புதிய அரசியல் அமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு வருமாக இருந்தால், தமிழீழம் கொடுப்பதற்கான அரசாங்கத்தின் சூழ்ச்சியை பெரும்பான்மை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று பரப்புரை செய்து நிச்சயமாக சர்வஜன வாக்கெடுப்பை தோல்வியடையச் செய்வதில் இனவாதிகள் உறுதியாகவே இருக்கின்றார்கள்.
இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள்.
அதற்கு அவர்கள் கூறியிருக்கும் காரணம், தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற தீர்வானது சட்ட ரீதியானதாக இருந்தாலும், அது தென் இலங்கை பெரும்பான்மை சிங்கள மக்களின் ஒப்புதலையும் பெற்றதாக அமைய வேண்டும். அப்போதுதான் தீர்வானது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கூறியிருக்கின்றார்கள்.
ஒருவகையில் இந்த கருத்து சரியானதுதான், ஆனால் அதற்காக சிங்கள மக்களின் ஒப்புதலைப் பெறுவது என்பது உண்மையாக இருக்குமாக இருந்தால், சிங்கள மக்களிடையே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாக புரிதலை ஏற்படுத்துவதற்கு ஒரு வேலைத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருக்க வெண்டும்.
அதற்கு முன்னர் சிங்களக் கட்சிகளை தெளிவுபடுத்தும் ஒரு வேலைத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து மக்களுக்கு தெளிவுபடுத்தாமல், சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசியலமைப்பு விடப்படுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் திர்ப்பை சிங்கள மக்கள் வழங்கப்போவதில்லை.
சர்வஜன வாக்கெடுப்பு சிங்கள மக்களால் தோற்கடிக்கப்படுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதுவும் அரசியல் ரீதியாக நன்மையாகவே அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அதாவது, சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் புதிய அரசியலமைப்பு தோற்கடிக்கப்பட்டால், ‘சிங்கள மக்களும், சிங்கள இனவாதிகளும் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை ஒருபோதும் வழங்கப் போவதில்லை.
ஆகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது அரசியல் தலைமையை அரசியலில் பலமான நிலையில் வைத்திருக்க வேண்டும். தலைமை பலமாகவும், போதுமான அரசியல் பலத்தோடும் இருந்தால்தான், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான குரலை சர்வதேசத் தளத்தில் ஒலிக்கச் செய்யமுடியும்.
சர்வதேசம் ஒரு நாள் முன்வந்து சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும்’ என்று ஒரு வாக்கு வங்கிக்கான பலமான பாதையை அமைத்துக் கொள்ள முடியும்.
இத்தனை சவால்களை எதிர்நோக்கியிருக்கும் புதிய அரசியலமைப்பானது, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நியாயமான தீர்வை உள்ளடக்கியதாக இருக்கின்றதா என்றால், அதுவும் இல்லை. அது தமிழ் மக்களின் அரசியல் தீர்வின் அடிப்படையையே தகர்த்துவிடும் அம்சங்களையே கொண்டுள்ளது என வெளிவரும செய்திகள்தான் வருத்தமளிக்கின்றது.
ஆக, ஓன்றுமில்லாத ஒன்றுக்கே இனவாதிகள் கோவணம் கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கியிருக்கின்றார்கள் என்றால், உப்புச் சப்பில்லாத அரசியலமைப்புக்கு தமிழ் மக்களே ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.