நுவரெலியாவில் இன்று இடம்பெறுகின்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தபோதும் அந்த நிகழ்வில் பங்கேற்பதை ஜனாதிபதி தவிர்த்துள்ளார்.
தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இன்று நுவரெலியாவில் இடம்பெறும் என அரசாங்க இணையதளத்தில் நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பிரதமர் தலைமையில் இடம்பெறும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தேசிய தைப்பொங்கல் விழாவை ஜனாதிபதி மைத்திரிபால புறக்கணித்தமை ஏன் என்பது தொடர்பான காரணம் வெளியிடப்படவில்லை.
தேசிய நல்லிணக்கத்துக்காக தாம் பாடுபடுவதாக அவ்வப்போது உறுதி மொழிகளை வழங்கிவரும் ஜனாதிபதி, தேசிய பொங்கல் விழாவை புறக்கணித்துள்ளமையானது சமூக ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.