இந்திய பயணிகளுக்கு இலங்கை தடைவிதித்து நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவிலிருந்து விமானங்கள் பல பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. இவை சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் எயார் இந்தியா விமானங்கள் பல பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமையை விமான ராடார் காட்டியுள்ளது.
சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸீன் 6E8481 மற்றும் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸீன் UL 144 ஆகிய விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளன.
மேலும் மும்பையிலிருந்து எயார் இந்தியா விமானம் AI275, சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL126 மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E8481 ஆகியவை கடந்த சனிக்கிழமை தரையிறங்கிய விமானங்களில் அடங்கும்.
இந்தியர்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியும்.
எனினும் எந்தவொரு பயணிகளும் இறங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கொரோனா வைரஸீன் மாறுபாடான பி .1.617 இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வைரஸானது இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், இவ்வைரஸ் தொடர்பில் இலங்கையானது எச்சரிக்கையாகவுள்ளது. கடந்த மே 6 ஆம் திகதி முதல் இலங்கையானது இந்திய பயணிகளுக்கு தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.