வவுனியா மாவட்டம் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அண்மையிலிருந்து இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் தமது தேவைக்காக அமைத்துள்ள கட்டடங்களையும் அகற்றிவருகின்றனர்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச் சாவடியாகவும் இருந்த குறித்த பகுதி 21 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது.
யுத்தம் நிறைவடைந்தும் நீண்டகாலம் குறித்த சோதனைச் சாவடி வடக்கு மாகாண மக்களின் பொருட்களைச் சோதனையிடுவதற்காக இயங்கி வந்ததும். குறித்த சோதனைச் சாவடி அமைந்துள்ள காணி தமிழ் மக்களுக்குச் சொந்தமானதாகும்.
இதனை விடுவிப்பதில் இராணுவம் மறுத்து வந்த நிலையில், குறித்த மக்கள் தமது காணிகளை விடுவிப்பதற்கு பல்வேறு போரட்டங்களை நடாத்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வருடம் குறித்த சோதனைச்சாவடி அமைந்துள்ள காணிகளை மக்களிடம் வழங்குவதற்கு இராணுவத்தினர் அனுமதியளித்த நிலையிலேயே தற்போது அவர்கள் மக்களின் காணிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.