இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள சீனன்குடா எண்ணெய் குதங்களில் மூன்றை, சிறீலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பாவனைக்கு மீளப்பெறும் நடவடிக்கையை தற்காலிகமாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறுத்திவைத்துள்ளார்.
சிறீலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவர் நியமிக்கப்படும்வரை தற்காலிகமாக இத்திட்டத்தை நிறுத்திவைக்குமாறு அவர் பணித்துள்ளார்.
பெற்றேலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
நாட்டில் தொடர்ச்சியான வறட்சி ஏற்பட்டுவரும் நிலையில், மின்சார உற்பத்திக்காக இந்த குதங்களில் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து சிறீலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் சீனன்குடா எண்ணெய்க் குதங்களை ஆய்வு செய்வதற்கு இரண்டு தடவைகள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
குத்தகைக்கு வழங்கப்பட்ட மூன்று எண்ணெய்க் குதங்களில் மூன்றை மீளவும் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது குறித்து, புதிய இந்தியத் தூதுவருடன் பேச்சு நடத்த வேண்டியிருப்பதாலேயே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று, பெற்றோலியக் கூட்டுத்தாபன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.