இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுட்டிக்கப்படுகிறது.
எனினும் இம்முறை கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு பொலிஸாரினால் கோரப்பட்டது.
எனினும் இறுக்கமான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வை, நடத்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.
எனினும் நேற்று இரவு முதல் முள்ளிவாய்க்காலுக்கு உட்டபட பொலிஸ் பிரிவு உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்படாமையினால், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேநேரம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு வவுனியா மற்றும், மட்டக்களப்பு மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.