சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் ஈரானுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் நாள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வதாக இருந்தார்.
இருப்பினும், அந்த நாட்களில் ஏற்கனவே திட்டமிட்டுள்ள வேலைகள் இருப்பதால் ஈரானுக்கான பயணத்தினை மேற்கொள்ளமுடியாதிருப்பதாக, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு ஈரானியத் தூதரகத்துக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி அமெரிக்க அதிபராக ரொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்கவுள்ளார் என்பதுடன் அவரது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதில் மைத்திரிபால சிறிசேன விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் இந்நிகழ்வில் வெளிநாட்டு விருந்தினர்களை ஏற்றுக்கொள்ளவில்லையென அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆகையால், அமெரிக்காவுக்கான பயணமும் கைவிடப்பட்டது. இந்நிலையில், வரும் மார்ச் மாதம் சிறிலங்கா அதிபர் ரஷ்யாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். மார்ச் 21ஆம் நாள் தொடக்கம் 4 நாட்கள் அவர் ரஷ்யாவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, நேரடியாக டாக்காவுக்கு செல்லும் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மார்ச் 26ஆம் நாள் நடக்கும் பங்களாதேசின் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கவுள்ளார்.