குஜராத் மாநிலம் முழுவதும் டவ் தே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
அரபிக்கடலில் உருவாகி குஜராத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த ‘டவ்தே’ புயலால் மராட்டியத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியது. இதில் மும்பையில் 114 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மேலும் 24 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்தது.
சூறைக்காற்றுக்கு ஏராளமான கட்டிட மேற்கூரைகள் பறந்தன. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. கடல் கொந்தளிப்பால் பல படகுகள் சேதம் அடைந்தன. சுற்றுலா தலமான கேட்வே ஆப் இந்தியா கடற்கரை பலத்த சேதம் அடைந்தது. மேலும் புயலில் சிக்கி மும்பையில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தானே, பால்கரில் 5 பேர் பலியாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதன் மூலம் புயலுக்கு 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் மராட்டியத்தில் மின்கம்பங்கள் சாய்ந்தது மற்றும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது தொடர்பாக 46 லட்சத்து 41 ஆயிரம் வீடுகள், நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவற்றை சீர் செய்யும் பணியில் மின் வினியோக நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தாண்டவமாடிய புயலால் கடல் கடும் சீற்றத்துடன் கொந்தளித்தது. நடுக்கடலில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மும்பையில் இருந்து தென்மேற்கில் சுமார் 70 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணறு கப்பலில் 273 பேர் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அந்த கப்பலின் நங்கூரம் தடுமாறியது.
இதனால் கப்பலில் நீர் புக தொடங்கியது. அந்த ஊழியர்களை மீட்டு வருவதற்காக கடற்படையினர் விரைந்தனர். இதேபோல மும்பையில் இருந்து 48 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள ஜி.ஏ.எல். கன்ஸ்டரக்டர் கப்பலில் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்தது. அந்த கப்பலில் தவித்த 137 பேரை பத்திரமாக மீட்க ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பல் புறப்பட்டு சென்றது. மேலும் தென்கிழக்கு மும்பையில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள எண்ணெய் கிணறு கப்பலில் பலரும் சிக்கி தவித்தனர். மேலும் தத்தளித்த ராட்சத படகில் பலர் சிக்கி கொண்டனர்.
இவ்வாறு மேற்கண்ட 4 இடங்களில் நடுக்கடலில் 707 பேர் சிக்கி கொண்டது தெரியவந்தது. அவர்களை மீட்கும் பணியில் கடற்படையினர் இரவு பகலாக ஈடுபட்டனர். போர்க்கப்பல்கள், இழுவை கப்பல்கள், கடற்படை ஹெலிகாப்டர்கள் நேற்று 2-வது நாளாக மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டன. கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் 317 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டதாக நேற்று இரவு கடற்படை தெரிவித்தது. மீட்கப்பட்டவர்கள் பலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலர் சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே மேலும் 390 பேர் நடுக்கடலில் தவித்து வருகின்றனர். அவர்களில் சிலர் மாயமாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் மும்பையில் 2 ஆயிரம் மரங்கள் புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து விழுந்துள்ளன. டவ்தே புயல் கரையை கடந்த குஜராத்தில் 13 பேரை உயிர் பலி வாங்கியுள்ளது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் 16 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
சுமார் 6 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதுடன், 70 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. 674 சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. டவ்தே புயல் குஜராத் மற்றும் யூனியன் பிரதேசமான டியூவில் கடலோரப் பகுதிகளை பெரும் சேதத்திற்கு ஆளாக்கியுள்ளது. அகமதாபாத், வடோதரா , சூரத் உள்ளிட்ட நகரங்கள் புயலின் கோரத் தாண்டவத்தில் சேதம் அடைந்து உள்ளன.
குஜராத்தில் சேதத்தை ஏற்படுத்திய டவ்தே புயல் , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து வட கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தியாவின் மேற்கு கரையோர அனைத்து மாநிலங்களையும் புயல் கடும் சேதத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார். பாவ்நகரில் இருந்து வான் மூலம் அவர் புயல் சேதங்களைப் பார்வையிட உள்ளார். அதன் பின்னர் அகமதாபாத்தில் உயர் அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.