கொரோனா பரவல் நிலைமையைப் பொறுத்தவரை இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இப்போதே சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஒரு பெரிய பேரழிவில் முடிவடையும் என ஐ.டி.எச் மருத்துவமனையில் மூத்த ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம கூறினார்.
வரவிருக்கும் விடுமுறையுடன் கூடிய வாரங்களால் ஏற்படும் பெரிய அழிவைத் தவிர்க்க வேண்டுமானால், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புடனும் சரியான முறையிலும் எடுப்பது மிக முக்கியமானது என்று அவர் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்தார்.
தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் நாடு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்பது உறுதி என்று டாக்டர் விஜேவிக்ரம கூறினார்.
அதன்படி, மக்கள் முகக்கவசங்களை சரியாக அணிய வேண்டும், கை சுத்திகரிப்பானை பயன்படுத்த வேண்டும், கைகளை சரியாகக் கழுவ வேண்டும், உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க வேண்டும். பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதும் முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பு எங்கள் மோசமான நடத்தைக்கான விளைவை தற்போது அனுபவிக்கின்றோம். மத ரீதியாகவும் சுகாதார விதிகளை பின்பற்ற நாங்கள் மீண்டும் தவறினால், ஒரு பெரிய பேரழிவு தவிர்க்க முடியாதது என்று அவர் வலியுறுத்தினார்.