கியூபெக் மாகாணத்தில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மேலும் நால்வருக்கு ரத்தக்கட்டிகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் கியூபெக் மாகாணத்தில் மட்டும் ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மொத்தம் 8 பேர்களுக்கு ரத்தக்கட்டிகள் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரத்தக்கட்டிகள் தொடர்பில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நால்வரும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதில் மூவர் மருத்துவமனைகளில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்கள் ஆபத்துக்கட்டத்தில் இல்லை எனவும், நான்காவது நபர் சொந்த குடியிருப்பிலேயே சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
ரத்தக்கட்டிகள் பாதிப்பு என்பது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியுடன் தொடர்புடையதாக கருதப்பட்டாலும், முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 100,000 பேர்களில் ஒருவருக்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு இருப்பதாக கியூபெக் சுகாதாரத்துறை அழுத்தமாக தெரிவித்துள்ளது.
மே 20 முடிய கியூபெக் மாகாணத்தில் 500,000 டோஸ் ஆச்ட்ராசெனகா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.