நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை 2025ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (21) அலரி மாளிகையில் தெரிவித்தார்.
குருநாகல், கேகாலை மற்றம் காலி மாவட்டங்களில் உள்ள நூறாயிரக்கணக்கான மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் மூன்று திட்டங்களை ஸும் தொழில்நுட்பம் ஊடாக ஒரே நேரத்தில் திறந்து வைக்கும் நிகழ்வின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
நீர் வழங்கல் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளித்ததை தொடர்ந்து கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
2025ஆம் ஆண்டிற்குள் முழு நாட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் இலக்கை அடைவதே எமது அரசாங்கத்தின் இலக்காகும். அத்தேசிய திட்டத்தின் மூன்று பெரிய நீர் வழங்கல் திட்டங்கள் இன்று குருநாகல், கேகாலை மற்றும் காலி மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
பூமியின் 71 சதவீதம் நீரால் சூழ்ந்திருப்பதை நாம் அறிவோம்.
ஆனால் அந்த தண்ணீரை நாம் பயன்படுத்த முடியாது. அதில் பெரும்பாலானவை கடல் நீர். எனவே நாம் அந்த தண்ணீரைக் குடிக்க முடியாது. இதை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது. அந்தவகையில் நோக்கினால் 3 சதவீத நீர் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
அதிலும் 0.5 சதவீதத்திற்கும் குறைவான நீரையே அருந்த முடியும். மனிதர்களின் சில செயற்பாடுகள் காரணமாக மக்கள் குடிக்கும் நீர் கூட இன்று மாசுபடுகிறது.
உலகை எடுத்து கொண்டாலும் சரி, இலங்கையை எடுத்து கொண்டாலும் சரி, நீங்கள் சில சமயங்களில் இந்த உண்மையை அனுபவிப்பீர்கள்.
கட்டளைகளால் மட்டும் இதை நிறுத்த முடியாது. எனவே, சுத்தமான நீரின் முக்கியத்துவத்தை பாடசாலை காலம் முதல் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அவர்கள்தான் ஒரு நாள் இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ளனர்.
இன்று நாம் செய்ய வேண்டியது அவர்களின் எதிர்காலத்திற்கான தண்ணீரைப் பாதுகாப்பதாகும். இன்று முழு உலகமும் இது குறித்து கவனம் செலுத்தி, நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசி வருகிறது.
எமது நாட்டின் மன்னர்கள் அன்று தண்ணீரின் மதிப்பை உணர்ந்து எதிர்காலத்திற்காக செய்த பணிகளின் பிரதிபலன்களை நாம் இன்றும் அனுபவித்து வருகின்றோம். பெரிய குளங்களை அமைத்து நீர்ப்பாசன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதுடன் அந்த அனைத்து இடங்களிலும் நீர் பாதுகாப்பும் இடம்பெற்றது.
வானத்தில் இருந்து விழும் ஒரு சொட்டு நீர் கூட மனிதனின் பயன்பாடின்றி வீணாக கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற மஹா பராக்கிரமபாகு மன்னனின் கூற்று இன்றைக்கும் பொருந்தும்.
பிற்காலத்தில் நம் நாட்டின் விவசாயத்துடன் இரசாயனப் பொருட்கள் நீரில் கலப்பதைத் தடுப்பதன் மூலம் நாம் பல சிக்கல்களைத் தவிர்த்திருக்க முடியும். தூய்மையான குடிநீர் இல்லாததால் ரஜரட மக்கள் இன்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை ரஜரட மட்டுமல்ல, பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
தேவையான தீர்வு இல்லாமல், சுத்தமான குடிநீரின் பிரச்சினையைப் பற்றி பேசுவது மக்களுக்கு பயனளிக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான் இது தொடர்பில் ஆராய்ந்தோம். கூறுவதற்கும் கவலையளிக்கிறது. ஆனால் குறிப்பிடாது இருக்கவும் முடியாது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தகவல்களின்படி நம் நாட்டில் 50 சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கே பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது. அவ்வாறாயின் அனைவரும் சுத்தமான குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலப்பகுதியில் மக்கள் குடிநீர் பிரச்சினை குறித்து எமக்கு நேரடியாக தெரிவித்தனர். அவர்கள் எம்மிடம் குறிப்பிட்டது வேறொன்றும் இல்லை. குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கொஞ்சம் தருமாறே அவர்கள் கோரினர்.
அதனால் 2025ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தை சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கி, நாடு முழுவதும் பல பாரிய நீர்வழங்கல் திட்டங்களைத் தொடங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.