கனடாவின் முன்னணி சஞ்சிகை ஒன்றினால் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆளுமைமிக்கவர்களுக்கான போட்டித் தேர்வில் வடக்கின் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் வெற்றிபெற்றுள்ளார்.
கனடாவின் கல்வி மற்றும் தொழிற்துறைகளில் மேற்கொண்ட சாதனையை பாராட்டி கௌரவிக்கும் வகையில் புஷ்பலதா மதனலிங்கத்திற்கு ” தி அண்பிரேக்கபிள் வுமென் (“The Unbreakable Woman) என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் இயங்கும் Canadian Occupational Safety சஞ்சிகையினால் “நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆளுமைமிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தை இலங்கையின் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக அகதியாக கனடாவிற்கு புலம்பெயர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஷ்பலதா, கணவரை இழந்த பெண்ணாக பல தடைகளை கடந்து ரேயொர்சன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.
தனது அயராத முயற்சியினால் ஒன்டாரியோ தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தினையும் ஆரம்பித்து பல்வேறு இடர்முகாமைத்துவ சேவைகளையும், ஆலோசனைகளையும் அவர் வழங்கி வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்றானது கனடாவில் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மரணித்துக் கொண்டிருந்த வேளையில் தனது இடர்முகாமைத்துவ அமைப்பின் ஊடாக உயிர்காப்பு நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்திருந்தார்.
இத்தகைய துணிச்சல்மிக்க நடவடிக்கையாலும் மன உறுதியாலும் கனடாவை கொரொனா நோய் தொற்றிலிருந்து மீட்டெடுக்க உதவியமைக்காகவும், துணிச்சல் மிக்க பெண்களை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டும் வகையிலும் Canadian Occupational Safety சஞ்சிகையினால் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி புஷ்பலதா மதனலிங்கம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் உயர்சாதனை படைத்தவர்களின் வரிசையில் தனது பெயரைப் பொறித்தமையின் ஊடாக உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களை தலை நிமிர வைத்துள்ளதாகவும் தமக்கு மட்டுமே வாழாமல் தமது தேசத்துக்கும் தம்மை அர்ப்பணித்த புஷ்பலதா மதனலிங்கத்தால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களும் பெருமை கொள்வதாகவும் பலர் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.