பிரேசில் நாட்டில் கொரோனா இறப்புகள் உச்சம் பெற்றுள்ள நிலையிலும், தடுப்பூசிகள் வாங்க ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மறுத்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா பெருந்தொற்றை அரசாங்கம் எதிர்கொண்ட விதம் தொடர்பில் நாடாளுமன்ற மேலவையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையிலேயே, ஜனாதிபதி போல்சனாரோ தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
பொது சுகாதார நெருக்கடியை நிர்வகிப்பதில் ஜனாதிபதி போல்சனாரோ ஏதேனும் கிரிமினல் குற்றம் செய்திருப்பார் என்பதை இப்போது கூற முடியாது எனவும்,
இன்னும் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் செனட்டர் ரெனன் கால்ஹிரோஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரையான கண்டறிதல்கள், போல்சனாரோவுக்கு எதிரான ஒரு திசையை நோக்கியே நகர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலில் கொரோனா பெருந்தொற்று என்பதே பொய் என்றார், பின்னர் அது வெறும் காய்ச்சல் தான் என்றார், பின்னர் தனிமைப்படுத்துதலுக்கும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கும் எதிராக குரல் கொடுத்தார்.
தொடர்ந்து மாஸ்க் அணிவதை விமர்சனம் செய்தார், கூட்டங்கள் கூடுவதை வரவேற்றார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் செனட்டர் கால்ஹிரோஸ்.
பிரேசில் மக்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக போல்சனாரோ மக்களை ஏமாற்றினார். இதனாலையே, கொரோனா தடுப்பூசி என்பதே தேவையில்லை எனவும், தடுப்பூசி வாங்குவதில் மெத்தனம் காட்டியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் இதுவரை 16 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4.5 லட்சம் மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.