தாராபுரத்தல் கொரோனா ஊரடங்கால் வேலை கிடைக்காமல் மன விரக்தியில் இருந்த முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்ன காளியம்மன் கோவில் அருகே சக்தி விநாயகர் கோவில் சந்து நாராயண பிள்ளை தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 75). இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு தண்டபாணி, ரமேஷ், நாகராஜ், ஆகிய 3, மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தனியார் கட்டிடங்களில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்த வீரப்பன் தனது மகன் நாகராஜனுடன் வசித்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை தொடங்கியதிலிருந்தே இவருக்கு செக்யூரிட்டி பணி கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து 2021 மே 10 முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இவர் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார். கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பலரும் இறந்து வருவதை தினந்தோறும் தெரிந்து கொண்ட இவர்,வைரஸ் நோயால் மக்கள் இறந்து விடுகிறார்கள் என்ற சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியில் இருந்த அவர் நேற்றிரவு குடியிருந்த வீட்டினுள் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தந்தையை காணவில்லை என மகன் அக்கம்பக்கத்தில் சுற்றி பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டினுள் இருந்த கிணற்றில் தந்தை வீரப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மகன் நாகராஜ் தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறை உதவியுடன் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி இறந்த முதியவரின் சடலத்தை மீட்டெடுத்தனர். மீட்டெடுத்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.