இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் வெடிக்கப்போகிறது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டதாக பிரபல அமெரிக்க ஊடகமான Axios தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வட்டாரங்கள் கூறியதாக மேற்கோள் காட்டி Axios வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் ஏற்பட உள்ளது குறித்து ஏப்ரல் மாத இறுதியிலேயே அமெரிக்காவுக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாலஸ்தீன நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பது மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுவதற்கான போராட்டங்கள் பெரும் மோதலாக வெடிக்கக்கூடும் என வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஏப்ரல் மாதமே ஜோ பைடன் நிர்வாகத்திடம் எச்சரித்தனர் என இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வட்டாரங்கள் கூறியதாக மேற்கோள் காட்டி Axios செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகை இந்த ஆரம்ப எச்சரிக்கைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனெனில் அந்த நேரத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் முக்கிய பிரச்சினையாக கருதப்படவில்லை என Axios குறிப்பிட்டுள்ளது.
மே 10ம் திகதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளிடையே நடைபெற்ற மோதலில் பாலஸ்தீனத்தின் காசாவில் 60 குழந்தைகள் உட்பட 240 பேர் கொல்லப்பட்டனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.