கொங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
எரிமலையில் இருந்து வெளியேறிய குழம்புகள் 10 கிலோமீற்றர் தூரம் வரை பரவியுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள நைராகொங்கோ என்ற எரிமலையில் இருந்து எரிமலை குழம்புகள் வானை நோக்கி வெளியேறி வருகின்றது.
இரண்டு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட கோமா நகரத்தில் அடர்த்தியான சிவந்த மேக கூட்டதை இந்த எரிமலை வெடிப்பு உருவாக்கியுள்ளது.
இந்த எரிமலை குழம்புகள் அருகில் உள்ள விமான நிலையம் வரை சென்றுள்ளதாகவும் அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் எரிமலை குழம்பில் இருந்து வெளியேறிய தீ பிளம்பு காரணமாக மக்களின் குடியிருப்புக்களும் தீக்கிரையாகியுள்ளன.
கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த எரிமலையானது வெடித்து சிதறியதில் 250 பேர் வரை பலியாகியானதுடன், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிமலையை சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள ரூவாண்டா எல்லைநோக்கி பயணமாகியுள்ளனர்.
மேலும் பலர் நகரத்தின் உயர்ந்த பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளதாக கொங்கோ தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எரிமலை வெடிப்பு ஆரம்பித்து பல மணிநேரத்தின் பின்னரே அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்திருந்ததுடன், அரசாங்கத்தின் அறிவிப்புக்கு முன்னதாகவே மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.