சரத்குமார் கூறியதாக வெளிவந்த அந்த செய்தி ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. சரத்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல இடங்களில் அவரது கொடும்பாவியை ரஜினி ரசிகர்கள் எரித்து போராட்டங்களை நடத்தினர்.
இதற்கு விளக்கம் அளிக்கும்விதமாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை, மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர்கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்று குறிப்பிட்ட கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.
அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைத்தான் கேட்கவேண்டும் என்று தெரிவித்தேன். பிறகு தமிழகத்தை தமிழன்தான் என்றும் ஆளவேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிகை சகோதரர்கள் ‘ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டனர்.
அதற்கு ரஜினி இனியவர், என் நண்பர். ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.
எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை என் சமத்துவ தமிழ் நெஞ்சங்கள் பொறுமையுடனும் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.