தீபாவுக்கு ஆதரவாக சென்னையில் கூட்டம் நடத்தக் கூடாது என்று ஜெ.பேரவையின் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கே.புகழேந்தியை அ.தி.மு.க.வினர் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானார். அவரது தலைமையை ஏற்காத அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டு வருவதோடு சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் ஜெ.பேரவையின் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கே.புகழேந்தி, தீபாவுக்கு ஆதரவாக இன்று விருகம்பாக்கத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்து, அதற்காக அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தை முன்பதிவு செய்தார்.
தற்போது கூட்டத்தை நடத்தக் கூடாது என்று போலீஸாரும், மண்டபத்தின் உரிமையாளரும் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கே.புகழேந்தி கூறுகையில்,
என்னுடைய குடும்பம் பாரம்பரியமிக்க அ.தி.மு.கவை சேர்ந்தது. என்னுடைய அப்பா எம்.ஜி.ஆர் நகர் கிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளர். எனக்கு புகழேந்தி பெயரை வைத்ததே எம்.ஜி.ஆர்.தான்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அம்மா தலைமையில் செயல்பட்டு வந்தேன். அம்மாவுக்கு அடுத்து அவரது அண்ணன் மகள் தீபாவின் தலைமையில் செயல்பட வேண்டும் என்பதே பெரும்பாலான அம்மா விசுவாசிகளின் விருப்பம்.
தீபாவுக்கு ஆதரவாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்து அதற்காக விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை கடந்த 13ம் தேதி முன்பதிவு செய்தேன்.
அதற்கு கட்டணமாக 13,800 ரூபாயும் செலுத்தினேன். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸிலும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றேன்.
இன்று காலை கூட்டம் நடத்த திருமண மண்டபத்துக்குச் சென்ற போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. மண்டபத்தில் விசாரித்த போது கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.
உடனடியாக காவல் துறையிடம் கேட்ட போது அவர்களும் இது மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று சொல்கின்றனர்.
தீபாவுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தக் கூடாது என்று எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. யார் மிரட்டினாலும் நான் பின்வாங்கப் போவதில்லை.
திருமண மண்டபத்தின் உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். மேலும், தீபாவின் ஆதரவாளர்களுடன் இன்று மதியம் எம்.ஜி.ஆர். நகரிலிருந்து பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளேன் என்றார்.
உங்களை யார் மிரட்டினார்கள் என்று கேட்டதற்கு, தென்சென்னை அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் வி.என்.ரவி என்று கூறினார்.
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வி.என்.ரவியிடம் கேட்ட போது, அ.தி.மு.க.வின் கொடி, பெயரை யாரும் தவறுதலாக பயன்படுத்தக் கூடாது என்று விருகம்பாக்கத்தில் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.
புகழேந்தி நடத்தும் கூட்டத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். மேலும் புகழேந்தியை நான் மிரட்டவில்லை என்றார்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலைய வட்டாரத்தில் கேட்ட போது, தென்சென்னை ஜெ.பேரவையின் மாவட்ட துணைச் செயலாளராக புகழேந்தி இருக்கிறார்.
ஜெ.பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்துவதாகத்தான் எங்களிடம் அனுமதி கேட்டு அவரது லெட்டர் பேடில் கடிதம் கொடுத்தார். தற்போது தீபாவுக்கு ஆதரவாக கூட்டம் நடத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கவே மண்டபத்தின் உரிமையாளர் மண்டபம் கொடுக்கவில்லை. மேலதிகாரிகளிடம் தகவலைச் சொல்லி இருக்கிறோம். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, தீபாவுக்கு ஆதரவாக புகழேந்தி ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஜெ.பேரவையின் பதவியை பயன்படுத்தக் கூடாது என்று அ.தி.மு.க.வினர் எங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் கூட்டம் நடந்தால் நிச்சயம் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். தீபாவுக்கு ஆதரவாக ஆலோசனை கூட்டம் நடத்துவதால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதை முன்கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று இருக்கலாம்.
தற்போது பேரணி நடத்தவும் புகழேந்தி தரப்பினர் முடிவு செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அனுமதியின்றி பேரணி நடத்தினால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வோம் என்றார்.