ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் நடிகை திரிஷா நீடிப்பதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் பதிவிடப்பட்டது. இதையடுத்து, தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் எப்போதும் பேசியதே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார் திரிஷா.
இதற்கிடையே திரிஷாவின் டுவிட்டர் பகுதியில் சர்ச்சைக்குரிய தகவல் வெளியிடப்பட்டது. இதற்கு, தன்னுடைய டுவிட்டர் கணக்கு யாரோ மர்ம நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டு விட்டதாக திரிஷா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் திரிஷாவின் தாயார் உமா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது மகள் திரிஷாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.
பின்னர் அவர் பேட்டியளிக்கும்போது, ஜல்லிக்கட்டுக்கு நடிகை த்ரிஷா எதிரானவர் அல்ல. பீட்டா அமைப்பில் த்ரிஷா உறுப்பினராக இல்லை. அவர் பீட்டா அமைப்பிற்கு விளம்பர தூதுவராகவும் இல்லை என்று தெரிவித்தார்.