கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ஸ்ரீதர், மும்பையில் வாழ்ந்து வருகிறார். 23 வயதில், வைல்ட்லைஃப் போடோகிராபராக இருக்கும் இவர், இத்துறையில் மிகவும் உயர்ந்த விருதாகக் கருதப்படும், Wildlife Photographer of the Year Awards 2020ல் ’HIGHLY COMMENDED’ விருதை வென்றுள்ளார். இந்தியாவில் இந்த விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமை ஐஸ்வர்யாவையே சேரும்.
‘‘என் பெற்றோர்கள் இருவருமே வனவிலங்கு பிரியர்கள். இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையை விரும்புபவர்கள். நான் குழந்தையாக இருக்கும் போதே, அப்பாவுடன் பல காடு மலைகளுக்குச் செல்வேன். பதினொறு வயதில், அவர் எனக்கு ஒரு கேமராவைக் கொடுத்தார். அந்த கேமராவுடன் அருகிலிருந்த பென்ச் வனவிலங்கு தேசிய பூங்காவிற்கு சென்று, ஒரு புலியை முதல் முறையாக படம்பிடித்தேன். அன்று தொடங்கியதுதான் இந்த கேமரா ஆர்வம்” என்று தன் கதையை உற்சாகமாகக் கூறுகிறார்.
18 வயதில், பஞ்சே தி லாஸ்ட் வெட்லாண்ட் என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ள இவர், ‘‘மும்பையிலிருக்கும் பஞ்சே என்ற நீர்த்தடம், பறவைகள் தங்கும் ஒரே இடமாகும். அதுவும் அழிந்துவிட்டால், இனி பல பறவைகள் மும்பை நகரிலிருந்தே காணாமல் போய்விடும். நம் சுற்றுச்சூழல் அமைப்பில், நீர்த்தடங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் முயற்சியில் உருவானதுதான் இந்த ஆவணப்படம்” என்கிறார். இந்த ஆவணப்படம் தூர்தர்ஷனில் வெளியானது. அந்த படத்திற்காக இவரை இயற்கை பாதுகாவலராக அறிவிக்கப்பட்டது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
“பல வனவிலங்கு போட்டோ கிராபர்கள், பெரிய சிங்கம், யானை போன்ற விலங்குகளைப் புகைப்படம் எடுக்கவே விரும்புவார்கள். ஆனால் எனக்கு வனத்தில் வாழும் அனைத்து உயிரினங்கள் மீதும் ஆர்வமும் ஈர்ப்பும் உண்டு. இதனால், சத்தமே இல்லாமல் அதே நேரம், இந்த அழகிய இயற்கை அமைப்பு உருவாகக் காரணமாக இருக்கும் பூச்சிகள், பறவைகள் போன்ற சிறிய உயிரினங்களை என் புகைப்படங்களில் முன்னிலைப்படுத்தி வருகிறேன்.
ஒரு முறை மின்மினிப் பூச்சிகள் ஒரு பெரும்படையாக, குறிப்பிட்ட இடத்திற்கு வருவதாகச் செய்தி படிச்சேன். அங்குச் சென்று மின்மினிப் பூச்சிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கேமராவுடன் கிளம்பினேன். இரவில்தான் மின்மினிப் பூச்சிகளைப் படமெடுக்கும். இதற்காக காலையிலே நான் கிளம்பிட்டேன். கையில் அம்மா கட்டிக் கொடுத்த உணவு மற்றும் என் கேமராவோடு வனத்திற்குச் சென்றேன். நிலவொளி குறைவாக இருக்கும் சமயத்தில்தான் மின்மினிப் பூச்சிகளின் ஒளி அதிகமாக இருக்கும். அங்கிருக்கும் சிலரின் உதவியுடன், மின்மினி பூச்சிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றோம்.
7 மணிக்கு அங்குச் சென்று, பத்து மணி வரை காத்திருந்தோம். ஒரு மரம் முழுக்க மின்மினிப் பூச்சிகள் நிறைந்திருந்தன. ஆனால், முதலில் எடுத்த சில புகைப்படங்கள் திருப்தியாக இல்லை. அதில் ஒரு மேஜிக் மிஸ் ஆவது போல உணர்ந்தேன். சில நேரம் காத்திருந்து மின்மினிப் பூச்சிகளை கவனித்தபோது, வானிலிருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்கள் கண்ணில்பட்டன. உடனே கேமராவில் வைட் லென்ஸ் பொருத்தி, வானிலுள்ள நட்சத்திரங்கள், தரையிறங்கி மரத்தில் மின்மினிகளாகப் பூத்திருப்பது போன்ற காட்சியை படமெடுத்தேன்.
இதை Lights of Passion என்ற தலைப்பில் விருதுக்கு அனுப்பிவைத்தேன். 80 நாடுகளிலிருந்து 50 ஆயிரம் பேரின் புகைப்படங்கள் விருதுக்காக பதிவு செய்யப்பட்டு 100 புகைப்படங்கள் தேர்வானது. அதில் என் படமும் அடங்கி இருந்தது’’ என்றவர் விலங்குகளின் குணாதிசயங்களை பற்றி குறிப்பிட்டார்.
‘‘விலங்குகளை தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மை துன்புறுத்தப்போவதில்லை. விலங்குகளைவிட மனிதர்கள் ஆபத்தானவர்கள். மும்பையில் இரவில் நடந்துபோகும் போது உருவாகும் அச்சம் கூட காடுகளில் எனக்கு ஏற்பட்டது கிடையாது.
பெண்களுக்குக் காட்டில் தான் அதிக பாதுகாப்பும் சுதந்திரமும் இருக்குன்னு நான் சொல்வேன். விலங்குகள் மனிதர்களைப் போல உணவைப் பதுக்கி வைப்பதுமில்லை. பசிக்கும் போது கொன்று தின்னும். பசி தீர்ந்ததும் நகர்ந்துபோய்விடும். வேட்டையாடப்பட்ட விலங்கின் மிச்சத்தை பறவைகளும் சிறிய விலங்குகளும் உண்ணும். விலங்குகள், அச்சுறுத்தப்படும் போதும், பசிக்கும் போதும் மட்டுமே பிற விலங்குகளைத் தாக்கும். ஆனால் மனிதர்கள் அப்படியல்ல” என்ற ஐஸ்வர்யா விலங்குகளுக்கு சிறிய தொந்தரவு கூட ஏற்படுத்தாமல் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார்.
‘‘கேமரா ஃப்லாஷ் ஒளிகளைக் காட்டுக்குள் நிச்சயம் பயன்படுத்த கூடாது. வண்டிகளின் ஹெட்லைட்டும் மிளிர கூடாது. விலங்குகளை அதன் போக்கில் வாழவிட வேண்டும். அப்புறம் வைல்ட்லைஃப் போட்டோ கிராபர்களுக்கு அதீத பொறுமை வேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் விலங்கை முன்கூட்டியே ஆராய்ந்து, மொத்த விவரங்களையும் சேகரிக்க வேண்டும். கோடைக் காலத்தில் சில விலங்குகள் நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும். இதுவே குளிர் நாட்களில் கதகதப்பான இடங்களுக்கு மாறிவிடும். அதே போல, அந்த விலங்குகளுக்குப் பசித்தால், கோபம் வந்தால் எந்த மாதிரியான உடல் மொழியை வெளிப்படுத்தும் போன்ற விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஃபிளமிங்கோ பறவைகள், நீர் அலைகளுக்கு ஏற்ப வருகை தரும். உயர் அலைகள் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு, குறிப்பிட்ட நீர்நிலைகளில் தங்கும். இந்த தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தால், சரியான நேரத்தைக் கணித்துச் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும். புலி, சிங்கங்கள் ஒரு நிமிடத்திற்குள் வேட்டையாடி முடித்துவிடும். அந்த கணம் திரும்பி வராது. அதனால் எப்போதும் தயார் நிலையில் விழிப்புடன் கவனமாக இருக்கவேண்டும்” என்ற அறிவுரையும் வழங்குகிறார்.
‘‘வெளிநாடுகளில் இருப்பது போன்ற வாய்ப்புகள் இந்தியாவில் வைல்ட்லைஃப் புகைப்பட கலைஞருக்கு இல்லை. பொருளாதாரப் பிரச்சனையில்லாதவர் இந்த துறையில் தங்கள் விருப்பத்திற்காக வேலைசெய்யலாம். மற்றபடி இதில் உழைப்பிற்கேற்ற வருமானம் கிடையாது. இந்தியாவில், செழிப்பான வனக்காடுகளும், வன உயிரினங்களும் இருக்கின்றன. ஆனால், அதற்கேற்ற செய்தி ஊடகங்கள் இல்லை. வெளிநாட்டு ஊடகங்கள் மட்டுமே இங்கு இருக்கின்றன.
இந்திய காடுகளில் படப்பிடிப்புக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஆனால், ஆஃப்ரிகா போன்ற நாடுகள், தங்கள் காடுகளையும் இயற்கை அழகையும் ஆவணமாக்கும் கலைஞர்களை ஊக்குவிக்க, இலவசமாக அனுமதி அளிக்கின்றனர். இந்திய அரசாங்கம், நம் இயற்கை வளங்களையும் உயிரினங்களையும் முக்கியப்படுத்தும் ஊடகத்தை ஆரம்பித்து, மக்களிடையே விழிப்புணர்வும் வனங்களின் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்’’ என்றார். ‘‘வால்பாறையில் உள்ள சிங்கவால் குரங்குகள் பற்றிய ஆவணப்படத்தை தயாரிக்கும்போது, கொரோனா பேரிடரால் அந்த வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கேன்.
என்னுடைய புகைப்படம் மூலம் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாக செயல்பட்டு வருகிறேன். மேலும் வன உயிரினங்களை மையப்படுத்திப் பல கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி இருக்கேன். அடர்ந்த அழகு நிறைந்த வனங்களை பார்க்கும் போது, இந்த உலகில், மனிதன் வெறும் ஒரு சிறிய பகுதிதான் என்பது புரியும். ஆயிரக்கணக்கான உயிரினங்கள், நம் இயற்கை அமைப்பை முறையாக வைத்திருக்க உதவுகின்றன. மனிதன் அதை சேதப்படுத்தாமல் ஒதுங்கியிருந்தாலே சுற்றுச்சூழலைக் காக்கமுடியும்” என்றார் ஐஸ்வர்யா ஸ்ரீதர்.