விசாகப்பட்டினம் அருகே ஆந்திரா ஒடிசா எல்லையில் உள்ள சில்லேரு நதியில் இரண்டு நாட்டு படகுகள் கவிழ்ந்து எட்டு பேர் மாயமான நிலையில் ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் இருந்து வந்து ஏராளமான தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
சாலை மார்க்கமாக சொந்த ஊரை அடைய முடியாது என்பதால் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு சில்லேரு நதியை அடைந்து அங்கிருந்து படகுகள் மூலம் புறப்பட்டு சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு படகுகளில் தொழிலாளர்கள் புறப்பட்டு சென்ற நிலையில் முதலில் சென்ற படகு நதியில் மூழ்கி விட்டது. எனவே நதியில் விழுந்து தத்தளித்துவர்கள் பின்னால் வந்த படகில் ஏற முயன்ற போது பாரம் தாங்காமல் அந்த படகும் நதியில் மூழ்கி 8 பேர் மாயமான நிலையில் ஒரு குழந்தையின் உடல் மட்டும் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். மாயமானவர்களின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.