எதிர்க் கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை அதற்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் எதிர்க் கட்சித் தலைவரானது இது இரண்டாவது முறை.
முன்னதாக 32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் சம்பந்தன் இந்தப் பதவிக்கு வந்திருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியின் போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதிவரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்திருந்தார்.
அதற்குப் பின்னர் அந்தப் பதவிக்கு சிறுபான்மையினத்தைச் சேர்ந்த எவரும் வரவில்லை. எனினும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு, மைத்திரி ரணில் ஆட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர்,
எதிர்க் கட்சி என்னும் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், எதிர்க் கட்சித் தலைவர் என்ற உரிமையை சம்பந்தனும் பெற்றார்.
ஆனால், மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் சம்பந்தன் வகிக்கும் பதவிக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எதிர்க் கட்சித் தலைவராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் கூட்டு எதிர்க் கட்சியினர் இது குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சிகளின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் கூட்டு எதிர்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் 51 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை கொண்டுள்ள கூட்டு எதிர்கட்சிக்கு குறித்த இரண்டு பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜே.வி.பிக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மொத்தமாக 22 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு வழங்குகின்றன.
ஆனால் அவர்களை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது தரப்பு கொண்டுள்ளது.
எதிர்க்கட்சியை தலைமை தாங்குவதற்கு தாம் விரும்புவோரை நியமித்து தமது செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
எதிர்கட்சி அமைப்பாளர்களையும் தாம் விரும்பியவாறு அரசாங்கம் நியமித்துள்ளது.
உலகில் எந்தவொரு நாட்டிலும் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டவர்களே எதிர்கட்சி தலைவர்களாக நியமிக்கப்படுவர்.
ஆனால் இந்த அரசாங்கம் இரா.சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக நியமித்திருக்கிறது. இதற்கான சரியான விளக்கத்தை இந்த அரசாங்கம் நமக்குத் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருத்தியிருக்கிறார்.
இலங்கை அரசியலமைப்பின் படி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்பதவிக்கு வரமுடியாது என்பதை கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம்.
ஆனால் இப்பொழுது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் விளைவாக எதிர்க்கட்சித் தலைவர் என்னும் அந்தஸ்தை சம்பந்தன் பெற்றிருக்கிறார்.
அதையும் தட்டிப்பறித்து இந்த நாட்டை ஒட்டுமொத்தமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.
ஏனெனில், அவர்களின் சிந்தனை சிறுபான்மை சமூகத்தினருக்கு எதும் சென்றடையக் கூடாது என்பது மட்டுமே. அதற்காக தான் அவர்கள் இதிலும் கை வைக்கிறார்கள்.
எதிர்க் கட்சித் தலைவர் என்னும் அந்தஸ்து சம்பந்தனுக்கு கிடைத்திருப்பதால் விளையப்போகும் பயன் ஏதும் இல்லை என்றாலும், அதனை தமிழர்களிடத்தில் இருப்பதை அவர்கள் சகித்துக்கொள்ள விரும்பவில்லை. அதற்காக அவர்கள் கடைசிவரை போராடியே தீருவார்கள்.