கடந்த ஆண்டு கொரோனா தொற்று தாக்கத்தின் தொடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான சேவை, மீண்டும் மே 25-ந் தேதி தொடங்கியது. அதன் பிறகு சீராக அதிகரித்து வந்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரியில் முந்தைய ஆண்டின் 64 சதவீத அளவை எட்டியது. ஆனால் கொரோனா 2-வது அலையின் காரணமாக, பல மாநில அரசுகள் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தன. அதனால் மறுபடியும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. இந்த மாதத்தின் 1 முதல் 16-ந் தேதியை முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 56 சதவீத குறைவு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முதலீட்டு தகவல் மற்றும் கடன் தரநிர்ணய முகமையான ‘இக்ரா’, நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் சரியும், வருகிற 2023-ம் நிதியாண்டுக்கு முன்பு அது கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கணித்துள்ளது.
‘உள்நாட்டில் விமான பயணிகள் எண்ணிக்கை மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை 2023-ம் நிதியாண்டிலும், சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கை 2024-ம் நிதியாண்டிலும் எட்டும் என்று கருதுகிறோம்’ எனவும் ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.