கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துள்ள நிலையில், சமூகமட்ட பி.சி.ஆர். சோதனைகளை அதிகரிக்கவேண்டிய சூழலில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திலிருந்து ஒழுங்கான வழங்கல்கள் இடம்பெறாமையாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கடந்த சனிக்கிழமையின் பின்னர் மருத்துவபீடத்தில் பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்படவில்லை.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சோதனைகள் நடத்தப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொள்வதற்குரிய இரசாயனப் பொருள்கள் கிடைக்கப்பெறாமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு மே மாதமளவில் கொரோனாத் தொற்றுப் பரவல் அதிகரித்து வந்தததையடுத்து யாழ். பல்கலைக்கழ மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதன் பின்னரே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் யாழ். பல்கலைக்கழக விலங்கியல் துறையிலிருந்த பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொண்டு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன்,
அதிகரித்த தொற்றாளர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்கும் வகையில், யாழ். போதனா மருத்துவமனையிலும், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் சமகாலத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
போதனா மருத்துவமனையின் பி.சி.ஆர். ஆய்வு கூடம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சில மாத காலங்கள் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
மீண்டும் வடக்கு மகாணத்துக்குமான பரிசோதனைகளை மேற்கொள்வதில் யாழ். போதனா மருத்துவமனை ஆய்வு கூடத்தின் இயலளவு போதாத காரணத்தால் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியன கடந்த வருடம் ஒக்ரோபர் மாதமளவில் மீண்டும் ஒருங்கிணைந்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குரிய மாதிரிகளைப் பெற்று வழங்குவதும், பரிசோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் மற்றும் உள்ளீடுகளை வழங்குவதும் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பொறுப்பாகுமென உடன்பாடு எட்டப்பட்டது.
தற்போது, யாழ். மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் நாளொன்றுக்கு சுமார் 400 க்கும் மேற்பட்ட மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு ஏற்ற வசதிகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றுக்கான உள்ளீடுகளைக் கிரமமாக வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதாரத் திணக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சுமத்தப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சுகாதார அமைச்சின் நேரடிக் கட்டமைப்பினுள் வராத காரணத்தினால், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களமே சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவில் இருந்து உள்ளீடுகளைப் பெற்று வழங்க முடியும் என அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னலும் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் உரிய உள்ளீடுகளைப் பெற்றுத் தருவதில் அக்கறையீனமாகச் செயற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.