இந்தியாவில் விமானத்தில் கொரோனா விதிமுறை மீறலுடன் திருமணம் ஒன்று நடைப்பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் கால கட்டுப்பாட்டை மீறி மதுரையை சேர்ந்த ஜோடிக்கு விமானத்தில் பறந்தபடி திருமணம் நடந்த சம்பவம் நேற்று சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவத்தை விசாரிக்க விமான போக்குவரத்து இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கும், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் திருமணத்துக்காக வெளியூர் செல்வதற்கும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தளர்வுடன் கூடிய ஊரடங்கு இருந்தபோது குறிப்பிட்ட நேரத்தில் எளிமையாக திருமணங்கள் நடந்தன. இந்த நிலையில் மே 24 முதல் 31 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கபட்டதால், கடந்த 23 ஆம் திகதி முழு நாளும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அந்த ஒரு நாளில் ஏகப்பட்ட திருமணங்கள் தமிழகத்தில் எளிமையாக நடந்து முடிந்தன. இந்த நிலையில் மதுரையில் நடந்த ஒரு திருமணம் தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராகேஷ் – தீக்ஷனா ஜோடியின் திருமணத்தை அனைவரும் கவனிக்கும்படி நடத்த திட்டமிட்டிருந்தனர். இரண்டு குடும்பத்தினரும், ஏஜென்சி மூலம் தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் உறவினர்கள் 130 பேரை அழைத்துச் சென்று, விமானம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேலே பறந்தபோது திருமணத்தை நடத்தியுள்ளனர்.
இந்த திருமண நிகழ்வை திருமண வீட்டாரும் பெருமையாக சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
ஆனால், இந்த திருமண நிகழ்ச்சி, கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கும் விமான போக்குவரத்து இயக்ககத்துக்கும் புகார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.