தேர்தல் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அப்போதே பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதைத் தடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் பணம் மட்டுமே வாக்குகளைத் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் மக்கள் சேவையாளர் ஒருவர் அல்லது ஓர் ஆசிரியர், ஓர் ஊடகவியலாளர் பாராளுமன்றத்திற்கு செல்வது கடினமாக இருக்கின்றது.
செல்வந்தர்களும் மோசமானவர்களுமே தேர்தலில்களில் வெற்றி பெற்றுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலை மாற்றம் அடைய வேண்டும்.
ஜனாதிபதி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் அத்தோடு தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று யுத்தம் நிறைவு பெற்று விட்டது ஆனால் இன்றும் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் சீர்படுத்தப்பட வில்லை.
புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் 2 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன, இன்னும் வடக்கு மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.
அது மட்டுமல்லாது வீடமைப்பு திட்டத்திலும் ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவே தோன்றுகின்றது. வடக்கு மக்களுக்கு பணத்தினை கொடுத்தால் அவர்களுக்கு தேவையான வீடுகளை அவர்களே அமைத்துக் கொள்வார்கள்.
அதன்படி வடக்குக்கு விஷேட அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்தால் மட்டுமே தமிழ் மக்களை வெற்றி கொள்ள முடியும்.
அப்போது பிரபாகரனுக்கு மட்டுமே சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடு பட முடிந்தது. அதனையும் தாண்டி புலி உறுப்பினர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
அப்போது விடுதலைப்புலிகளில் முக்கியஸ்தகர்கள் மட்டுமே நோர்வே உட்பட இலங்கையுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
ஆனால் இப்போது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு விட்டது. முறையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
மேலும் முழு நாட்டுக்கும் எதிர்க்கட்சி தலைவர் என்பதை சம்பந்தன் மறந்து விட்டார். அவர் வடக்கு கிழக்கிற்கு மட்டுமே எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
தமிழ் மக்களுடன் முறையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அவர்களுடைய காணிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும். ஆனால் அவை செய்யப்பட வில்லை.
ஆரம்பகாலங்களில் பிரபாகரனையும், புலிகளையும் அழிக்க முடியாது, ஆயுத பலத்தில் சிறப்பாக விடுதலைப்புலிகள் செயற்பட்டு வருகின்றார்கள்.
அதனால் பிரபாகரனுக்கு பணம் கொடுத்து அல்லது சமாதானம் பேசி வடக்கு கிழக்கினை பிரித்து கொடுத்து விடும் வகையில் ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தார்கள்.
ஆனால் அந்த நிலை மாற்றமடைந்தது இப்போது தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது இருந்தபோதும் சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் நடந்து வருகின்றார்கள்.
குறிப்பாக யுத்த குற்றம் இடம் பெற்றது என்ற வகையில் இராணுவத்தினரை தண்டிக்கப்பார்க்கின்றார்கள்.
அவற்றை விடுத்து விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப செயற்பட வேண்டும் எனவும் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.