எம்.ஜி.ஆர். பிறந்து நூறாண்டு ஆகியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்று திரையுலகம் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் பேரரசு எம்.ஜி.ஆர் சாதனைகள், மக்களிடத்தில் அவர் எப்படி இருந்தார். திரையுலகிற்கு அவர் ஆற்றிய பணி உள்ளிட்ட பல அம்சங்களை ஒரு பாடலாக தொகுத்து அதை வீடியோ வடிவில் உருவாக்கி வெளியிட இருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறும்போது, ‘எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. இவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகியவற்றை சேகரித்து, ஒரு பாடல் எழுதி அதை வீடியோவாக தயார் செய்திருக்கிறேன். இந்த வீடியோவை எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, எங்கள் இல்லத்திலேயே வெளியிடலாம் என்று கூறினார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான நாளை, எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களின் இல்லமான ராமாபுரத்தில் வெளியிட இருக்கிறேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகளை பற்றிய வீடியோவை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்’ என்றார்.
இயக்குனர் பேரரசு உருவாக்கியுள்ள வீடியோவிற்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களில், சங்கரின் பேரன், ரசாந்த் இசையமைத்துள்ளார். லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார்.