கொரோனாத் தொற்று பாதித்தவர்களும், தீவிர தொற்றிலிருந்து மீள்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை செலுத்தி கொண்டவர்களும் முழுமையான விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்.
இல்லையென்றால் அவர்களுக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு, பார்வை பறி போகக்கூடிய அபாயம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக கண் சத்திர சிகிச்சை நிபுணர் அமர் அகர்வால் விளக்கமளிக்கையில்,
‘மனித உடலில் மூக்கும், கண்களும் மூளையுடன் தொடர்புள்ளவை என்பதால், கறுப்புப் பூஞ்சைத் தொற்று மூளையிலும் வேகமாக பரவ தொடங்குகிறது.
கண் நரம்புகள் மூளையுடன் இணைந்து செயற்படுவதால் அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பார்வைத் திறன் இழப்பு ஏற்பட்டால் அதனை மீண்டும் மீட்க இயலாது என்பதுதான் உண்மை.
இதன் காரணமாக கறுப்புப் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும். மாறாக பெறாதிருந்தால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
கறுப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பிற்குரிய அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவரின் ஆலோசனையை பெறுவதும், மூக்கிலிருந்து வரும் கருமையான திரவத்தை பரிசோதனை செய்வதும் முக்கியம்.
எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் மூளையில் பரவியிருக்கும் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கலாம். அதனடிப்படையில் சத்திரசிகிச்சை செய்து கருப்புப் பூஞ்சைத் தொற்றை அகற்றலாம்.
அதன் தொடர்ச்சியாக மருந்துகள் வாயிலாக அதனை குணப்படுத்தலாம். கொரோனா பாதிப்பின் தீவிர தொற்றிலிருந்து மீள்வதற்காக ஸ்டீராய்ட் மருந்துகளை செலுத்தி கொண்டவர்களும், விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்’ என்றார்.