கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வர, மறுபுறம் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிட்டோம் என்று முழுமையாக சந்தோஷப்பட வேண்டாம்.ஏனெனில் கொரோனா வைரஸிலிருந்து போராடி மீண்ட நபர்கள் சில நோய்த்தொற்றுகள் மற்றும் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய ஆரோக்கிய பிரச்சனைகள் சில நேரங்களில் சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட நீடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி நீண்ட நாட்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் லாங் கோவிட் அறிகுறிகள் என்று கூறுகின்றனர்.
லாங் கோவிட் அறிகுறிகளுக்கு ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
லாங் கோவிட் அல்லது கோவிட்-க்கு பிந்தைய நோய்க்குறியால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் போராடக்கூடும். இப்படி சந்திக்கும் லாங் கோவிட் அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
சிலருக்கு லாங் கோவிட் அறிகுறிகள் மிதமான அளவில், தானாகவே சரியாகுமாறு இருக்கலாம். இன்னும் சிலருக்கு மிதமானதாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம். இத்தகைய அறிகுறிகளை சந்திப்பவர்கள், உடனே கவனத்தை செலுத்தி மருத்துவர்களை அணுக வேண்டும். இந்திய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளில் மிகவும் பொதுவாக காணப்படும் லாங் கோவிட் அறிகுறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றிற்கு உடனடி கவனம் தேவைப்படலாம்.
கோவிட்-க்கு பிந்தைய இருமல்
தொடர்ச்சியான இருமல் என்பது கொரோனா நோய்த்தொற்றின் உன்னதமான அறிகுறிகளுள் ஒன்றாகும். மேலும் சில நோயாளிகளுக்கு, உடலில் இருந்து வைரஸின் அளவு குறைந்த பின்னும் இருமல் சில வாரங்களுக்கு நீடித்திருக்கும். இப்படி நீடித்திருக்கும் இருமல் மேல் சுவாச அழற்சியின் அடையாளமாக இருக்கலாம். இத்தகைய இருமலை சிரப் குடிப்பதன் மூலமும், மூலிகை தேநீர் மற்றும் கசாயத்தைக் குடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்.
உடல்நலக்குறைவு, மூட்டு வலி மற்றும் தசை வலி
கொடிய கொரோனா வைரஸை உடல் எதிர்த்துப் போராடியபின், மனச்சோர்வு, அசௌகரிய உணர்வு போன்ற அறிகுறிகளை சந்திக்கலாம். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பிறகு ஓரிரு மாதங்கள் வரை மூட்டு வலி, தசை வலி, தலைவலி போன்ற நீடித்த அறிகுறிகளையும் ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.இது தவிர, கடுமையான தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய நோயாளிகளும் லேசான காய்ச்சல், வீக்கம் போன்ற அறிகுறிகளை சில வாரங்களுக்கு சந்திக்கலாம். இருப்பினும் லேசான காய்ச்சலுடன், குளிர் அல்லது உடல் வலியை அனுபவித்தால், மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
தூங்குவதில் பிரச்சனை அல்லது தூக்க கோளாறுகள்
கொரோனாவில் இருந்து மீண்ட சில நோயாளிகள் மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்க பிரச்சனைகளால் போராடுகின்றனர். கோவிட்-19 ஒருவருக்கு தூக்கமின்மை அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மீட்கப்பட்ட நோயாளிகளும் நல்ல தூக்கத்தை பெறுவதில் சிரமத்தை சந்திப்பதாக கூறுகின்றனர். மன அழுத்தம், பதட்டம், தற்போதைய சூழ்நிலைகள் போன்றவை தான் பலரது தூக்கத்தை இழக்கச் செய்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆரோக்கியமாக இருக்க ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் நல்ல தூக்கத்தின் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும் மற்றும் விரைவில் தொற்றில் இருந்து குணமாக முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தியானம், யோகா போன்றவை மனதிற்கு அமைதியை வழங்கி, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
நினைவாற்றல் குறைபாடு, மந்தநிலை
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நரம்பியல்-உளவியல் மற்றும் அறிவாற்றல் சிக்கல்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் கோவிட் நோய்த்தொற்று மூளையை ஆழமாக பாதிக்கக்கூடும். இதன் விளைவாகவே மனநல பிரச்சனைகளை மக்கள் சந்திக்கிறார்கள். குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகள் இம்மாதிரியான அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
மிதமான அல்லது கடுமையான வடிவில் பாதிக்கப்பட்ட கொரோனாவில் இருந்து மீண்ட கோவிட் நோயாளிகளுள் சிலர், அன்றாட பணிகளில் கவனத்தை செலுத்துவதிலும் அல்லது செய்வதிலும் சிரமத்தை சந்திக்கலாம் அல்லது நினைவாற்றல் குறைபாடு, மந்தநிலை போன்ற அறிகுறிகளையும் அனுபவிக்கலாம்.
மேற்கூறிய லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைத் தவிர, மருத்துவ கவனிப்பு தேவைப்படும் சில அறிகுறிகளும் உள்ளன. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
ஓய்வு நேரத்தில் மூச்சுத்திணறல்
திடீரென ஓய்வு நேரத்தில் கூட மூச்சுத் திணறல் அனுபவிப்பது நுரையீரல் தக்கையடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது உடலில் வைரஸ் பரவுவதால் உருவாகும் இரத்த உறைவுகளின் விளைவாக இருக்கலாம். மேலும் படபடப்பு, தலைச்சுற்றல், இதயத் துடிப்பில் மாற்றங்கள் போன்றவற்றையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
நெஞ்சு வலி
கொரோனாவில் இருந்து மீண்ட பின் நெஞ்சு வலியை அனுபவித்தால், அது இதயத்தில் உள்ள பிரச்சனை அல்லது இதய தசை சுருக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். இம்மாதிரியான அறிகுறியை அனுபவிப்பவர்கள், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீரக பாதிப்பு
ஆய்வுகளின் படி, கொரோனா வைரஸ் சிறுநீரகங்களையும் பாதிக்கும் மற்றும் நோயாளிகளுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். அதுவும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வயிற்றுப் பகுதிகளில் அடிக்கடி வலியை சந்தித்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். அதோடு அபாயங்களைத் தவிர்க்க, ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.
கால் வலி அல்லது வீக்கம்
கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுள் பலர் உடலில் இரத்த உறைவு பிரச்சனைகளை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்கள் கால் வலி, வீக்கம், வேகமான இதயத் துடிப்பு, கை கால் பலவீனம் போன்றவற்றை சந்தித்தால், உடனே கவனிக்க வேண்டும்.