கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் மிக உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருது வழங்கப்பட்டதற்கு மலையாள திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த மலையாள கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி.குறுப் அவர்களின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கேரளாவில் சிறந்த இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மலையாள கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது முதல்முறையாக, ஒரு தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள என் காதலா என்னும் பாடலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் உயரிய விருது கிடைத்ததற்கு, அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் என முதலமைச்சர் ஸ்டாலினும் பாராட்டினார். இதேபோல, பலரும் பாராட்டு தெரிவித்தனர்.இதனிடையே, கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் மிக உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருது வழங்கப்பட்டதற்கு மலையாள நடிகை பார்வதி நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு பாலியல் வன்கொடுமை புகாருக்குள்ளானவருக்கு ஓஎன்வி விருது வழங்குவதா..? என்றும் அவரது பெயரில் இவருக்கு விருது வழங்கி மரியாதை செலுத்தினால், அது மிகுந்த அவமரியாதையாகும் எனக் கூறியுள்ளார். இதேபோல, பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.