வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது.
அதன் படி டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக, தனுஷ்கா குணதிலகா-குசால் பெரேரா களமிறங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 81 ஓட்டங்கள் குவித்த நிலையில், தனுஷ்கா குணதிலகா 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். அதன் பின் வந்த பதும் நிஷன்கா நான்கு பந்துகளில் ஒரு ஓட்டம் கூட எதுவும் எடுக்காமல் அவுட் ஆக, குசால் மெண்டிஸ் 22 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு துவக்க வீரரான குசல் பெரேரா, தனஞ்சய டி செல்வாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் இலங்கை அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது. வங்கதேச அணியின் பந்து வீச்சை ருத்ரதாண்டவம் ஆடிய குசால் பெரேரா சதம் அடித்து 120 ஓட்டங்கள் எடுத்த நிலையில், தஞ்சய டி செல்வா 55 ஓட்டங்களிலும், வெளியேற, இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக டஸ்கின் அகமது 4 விக்கெட்டுகள் விழ்த்தினார். 287 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்தா சமீரா, மொகம்மது நயீம்மை ஒரு ஓட்டம் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த ஷகிப் அல் ஹசனை 4 ஓட்டங்களிலும், மற்றொரு துவக்க வீரரான தமிம் இக்பாலை 17 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் அவுட்டாக்கி வெளியேற்றினார்.
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய முஸ்தபிசுர் ரஹூம் 28 ஓட்டங்களில் பவுலியன் திரும்ப, மொசடக் ஹுசைன் மற்றும் மகதுல்லா இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர்.
இருப்பினும் இந்த ஜோடியை ரமேஷ் மெண்டிஸ் பிரித்தார். மொசடக் ஹுசைன் 51 ஓட்டங்களில் வெளியேற, மகமதுல்லா 53 ஓட்டங்களில் அவுட்டாகியதால், வங்கதேச அணி இறுதியாக 42.3 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக துஷ்மந்தா சமீரா 9 ஓவர் வீசி 16 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இரண்டு போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, கடும் விமர்சத்தை சந்தித்து வந்த நிலையில், அதற்கு பழி தீர்க்கும் விதமாக இப்போட்டியில் இலங்கை ஜெயித்து காட்டியுள்ளது.